Tuesday, 25 April 2017

மனம் கவர்ந்த புத்தகங்கள்

வள்ளுவன்,பாரதி,பாரதிதாசன்,.வே.சா,மௌனி,புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன்,கு.அழகிரிசாமி,அசோகமித்திரன்,கி.ராஜநாராயணன், வண்ணதாசன்,வண்ணநிலவன்,சுந்தரராமசாமி போன்ற எண்ணற்ற பிதாமகர்கள் நம் இலக்கியத்திற்கு வழங்கியுள்ள கொடைகள் அளவிட முடியாதவை. அவற்றிலிருந்து சில புத்தகங்களை மட்டும் தேர்ந்தெடுப்பது என்பது லேசுப்பட்ட காரியமா என்ன? வைக்கோல் போரில் ஊசி தேடுவதற்கு ஒப்பானதாகும்.பத்து புத்தகங்கள் மட்டுமே என்று தீர்மானித்து விட்டதால் திக்குமுக்காடிப் போய்விட்டேன் என்றுதான் சொல்லவேண்டும். இருப்பினும் என்னளவில் மனம் கவர்ந்த புத்தகங்களைப் பற்றி எழுதியிருக்கிறேன். பிடித்தமான புத்தகங்களைப் பற்றி எழுதுவதென்பது எவ்வளவு சந்தோஷமான விஷயமென்பது எழுதும் போது தான் தெரிந்தது.இதோ என் சந்தோஷத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்

1.பொன்னியின் செல்வன் – கல்கி


கார்த்திகை மாதத்து அகல்விளக்கு நிலாவைப் பற்றி எழுதப் போகிறதா?ஆழமாய் விழுதுகளிறக்கிய ஆலமரத்திற்கு இந்தப் புல்லின் பாராட்டுரையா? என நீங்கள் வினவினால் நான் ஆச்சர்யமோ,வருத்தமோ படப் போவதில்லை.ஏனெனில் பொன்னியின் செல்வனின் வீச்சு அப்படி.
எங்கள் குடும்பமே பொன்னியின் செல்வன் குடும்பம் என்று சொன்னால் மிகையில்லை.ராஜராஜன்,அநிருத்தன்,சேந்தன்,அமுதன்,நந்தினி,
வாணி என்னும் பெயர்களுடன் எங்கள் குடும்பத்தில் உலவிக் கொண்டிருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.உங்களுக்குப் பிடித்த நூல் எதுவென்று கேட்டால் தமிழ்நாட்டில் தொண்ணூறு சதவீதத்தினருக்கு மேல் பொன்னியின் செல்வனைத் தான் சொல்வார்கள் என்று என்னால் உறுதியாகக் கூறமுடியும்.பொன்னியின் செல்வன் அரசகுலத்துக் கதையா? அரசியல் கதையாகுடும்பக் கதையா? சஸ்பென்ஸ் கதையாகாதல் கதையாஎன்று கேட்டால் என்ன சொல்வீர்கள்?அனைத்தும் கலந்த ஓர் காவியமே இந்நூல்.
பொன்னியின் செல்வன் எழுதுவதற்காக மூன்று முறை இலங்கை சென்று வந்தார் கல்கி.2400 பக்கங்களைக் கொண்ட இந்நூல் 1950 முதல் மூன்றரை ஆண்டு காலம் கல்கி இதழில் வெளிவந்தது.
ஆடித்திங்கள் பதினெட்டாம் நாள் முன் மாலை நேரத்தில் அலைகடல் போல் விரிந்து பரந்திருக்கும் வீரநாராயண ஏரியின் வழியாக வந்தியத்தேவன் பயணம் போய்க் கொண்டிருப்பதில் துவங்குகிறது இந்நூல்.முதலில் ஆழ்வார்க்கடியானைச் சந்திக்கும் வந்தியத்தேவன் பின்னர் ஒவ்வொரு கதாபாத்திரமாக சந்தித்துக் கொண்டே போகிறான்.அனைவரையும் சந்தித்த பின் வந்தியத்தேவனின் எண்ணவோட்டத்தை இவ்வாறு எழுதுகிறார் கல்கி.
ஆகா! தடங்கலுக்கு என்ன குறைவு? உலகமே தடங்கல் மயந்தான்! ரவிதாஸனைப் போன்ற மாய மந்திரவாதிகளும்,நந்தினியைப் போன்ற மாய மோகினிகளும்,பழுவேட்டரையர்களைப் போன்ற சதிகாரர்களும்,கந்த மாறனையும்...பார்த்திபேந்திரனையும் போன்ற சிநேகத் துரோகிகளும், பூங்குழலியையும்...வானதியையும் போன்ற பித்துக்குளிப் பெண்களும்,வீர வைஷ்ணவ ஒற்றர்களும்,காளாமுகச் சைவர்களும்,கொள்ளிவாய்ப் பேய்களும், ஆழந்தெரியாத புதைசேற்றுக் குழிகளும் நிறைந்த உலகமல்லவா இது?
ஏகப்பட்ட கதாபாத்திரங்களைக் கொண்ட பொன்னியின் செல்வனில் என் மனம் கவர்ந்த ஆண் கதாபாத்திரம் “ராஜராஜன்”.ஓர் ஆண் மகனுக்குரிய அத்தனை குணாதிசயங்களையும் ஒருங்கே பெற்றவன்.பெண் கதாபாத்திரம் “பூங்குழலி”.அவளுடைய அழகு,எளிமை,நாசுக்கும்...கூர்மையும் கொண்ட பேச்சு வாசகர்களின் மனதை ஈர்க்கக்கூடியவை.எல்லா இளம் வாசகர்களும் ஒரு வயதில் பூங்குழலியைக் காதலித்திருப்பார்கள் என்று ஒரு இலக்கிய வழக்காறு உண்டு.
படிக்க எடுத்துவிட்டால் கீழே வைக்க முடியாத அளவுக்கு சுவாரஸ்யம் மிகுந்தது பொன்னியின் செல்வன்.புத்தகம் படிப்பதில் விருப்பம் கிடையாது என்று கூறுபவர்களுக்கு இந்நூலை முதலில் படிக்குமாறு பரிந்துரைக்கலாம்.படித்து விட்டார்களானால் தமிழின் மேலும்,புத்தகம் படிப்பதிலும் ஆர்வம் கொள்ளாமல் இருக்கவே முடியாது.இப்படி ஓர் நூல் இதுவரை தமிழில் வெளிவந்ததில்லை.இனி வெளிவரப் போவதுமில்லை.

2.சில நேரங்களில் சில மனிதர்கள் ஜெயகாந்தன்


ஞானபீட விருது வென்ற-தன் படைப்புகளால் சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்திய,பிரமிக்க வைத்த,சிலிர்ப்பூட்டிய,துள்ள வைத்த,மிரள வைத்த ஜெயகாந்தன்(ஜே.கே)...எழுத்தாளர்களின் கர்வம்;தமிழர்களின் தலைநிமிர்வு. அவரது நாவலைக் குறிப்பிடாமல் எவரேனும் பிடித்தமான புத்தகங்களைப் பற்றி எழுத முடியுமா?
எழுத்து,பேச்சு,செயல்பாடு என தமிழ்ச் சமூகத்தின் மேம்பாட்டுக்காகத் தன் மொத்த வாழ்க்கையையும் அர்ப்பணித்ததுடன் ஒரு எழுத்தாளன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதற்கு அடையாளமாக ஜே.கே விளங்கினார்.
எனக்கு நானே கடவுள்...எனக்கு நானே பக்தன்...என் வாழ்நாள் எல்லாம் திருநாள்...மரணம் எனக்கு கரிநாள்!” என முழங்கிய எழுத்து சாமுராய்.என் மனம் கவர்ந்த நூல்களில் சாகித்ய அகாடமிவிருது பெற்ற ஒரே நூல் இது மட்டும் தான்.ஜே.கே யின் அக்னிப்பிரவேசம் என்னும் சிறுகதையின் நீட்சி தான்சில நேரங்களில் சில மனிதர்கள்.இதன் தொடர்ச்சியேகங்கை எங்கே போகிறாள்?” மற்றும்சுந்தரகாண்டம்.
காலத்தின் அலைகளால் எற்றுண்ட,மோதி மூழ்கிய,போக்கில் மிதந்த,எதிர்த்து ஓய்ந்த-ஓர் ஆத்மாவின் கதை இது.அறுபதுகளில் - எழுதப்பட்ட காலத்தில் – குறிப்பாக மத்தியத்தரக் குடும்பங்களில் -  கடும் சர்ச்சையையும் அதிர்ச்சி அலைகளையும் உருவாக்கியது.
யாரோ,ஊர் பேர் தெரியாதவனிடம் களங்கப்பட்டு வந்த கங்காவின் தலையில் தண்ணீர் விட்டு நீ புனிதமாயிட்டே என்கிறாள் அம்மா.நிகழ்ந்து விட்ட அவமானம் கங்காவின் வாழ்நாளின் ஒவ்வொரு கணத்தையும் குத்திக் கிழித்து அவஸ்தையையும்,துன்பத்தையும் விளைவிப்பதாக இருக்கிறது.தன் நிலைமைக்குக் காரணமானவனான பிரபுவை 12 வருடங்கள் கழித்துத் தேடிக் கணடு பிடிக்கிறாள்.அவனுக்கு மஞ்சு என்கிற மகள் இருக்கிறாள் என்பதையும் தெரிந்து கொள்கிறாள்.பிரபுவுக்குத் தோழியாகி நாளடைவில் காதலியாகிறாள்.மேலும் தன்னுடைய விரக்தியான வாழ்க்கைக்குக் காரணம் பிரபுவல்ல...தன்னைச் சுற்றியுள்ள மனிதர்களும்,கட்டுப்பெட்டியான வளர்ப்பு முறையுமே என்ற முடிவுக்கு வருகிறாள். பிரபுவின் குற்றவுணர்ச்சி அவளை ஏற்கமுடியாமல் தடுக்கிறது.அவர்களின் பிரிவுடன் கதை நிறைவு பெறுகிறது. ஒவ்வொரு கெட்டவனுக்குள்ளேயும் நல்ல பண்பும்,குணாதிசயமும் இருக்கும் என்பதை எடுத்துக்காட்டுகிறது இந்நூல்.கங்கா என்ற கதாபாத்திரத்தின் மூலம் சமூகத்தின் வக்கிரங்களைச் சாடுகிறார் ஜே.கே.
“சில நேரங்களில் சில மனிதர்கள் மிதமிஞ்சிப் பிரபலமானதாலேயே அந்தரங்கமான கூரிய வாசிப்புக்கு ஆளாகாமல், ’தீவிர’ வாசகர்கள் எனத் தங்களை நம்பிக் கொண்டிருப்பவர்களால் பன்முக வாசிப்பைப் பெறாமல் அங்கீகரிக்கப்பட்ட பொதுவான தளத்திலேயே வாசித்து முடிக்கப்பட்டு விடுகிறதுஎனக் கருதும் இலக்கிய ஆர்வலர்களும் உண்டு.
நாவலின் ஆண் கதாபாத்திரங்கள் கங்காவுக்கு ஏன் அப்படிப் படுகிறார்கள் என்ற ஒரு கோணம்,கங்காவுக்கும் அவள் அம்மாவுக்கும்  உள்ள உறவின் முரண்பட்ட வரிகளைத் தொகுத்துப் படித்தால் வேறு ஓர் கோணம்,மீண்டும் மீண்டும் ஆணிடம் ஏதோ ஒன்றை எதிர்பார்த்து – ஆங்காரமும் கண்ணீருமாக வெளியேறும் கங்காவின் கோணத்திலிருந்து ஓர் பார்வை – எனப் பல கோணங்களில் இந்நூலை வாசிக்கலாம்.   
நாவலில் பெரும்பாலான விஷயங்கள் வாசகனின் யூகத்துக்கும்,கற்பனைக்குமே விடப்படுகின்றன.கங்கா, பிரபு, மஞ்சு,வெங்கி மாமா மற்றும் இதர பாத்திரங்கள் அனைத்துமே சற்று அதீதமாகத் தெரிந்தாலும்...Extremity is not madness.
கடந்த காலத்தில் வாழ்க்கையில் நடந்து முடிந்து விட்ட பல சம்பவங்களை ஒரு சிறு சொல் அல்லது செயலால் மாற்றியமைத்திருக்க முடியும் என்பதை நிகழ்காலத்தில் உணரும் கங்காவின் பாதிக்கப்பட்ட மனதில் ஏற்படும் தவிப்பும், அங்கலாய்ப்பும், ஆற்றாமையும் சொல்லவொணாதது.
மிகக்கூர்மையான,கனகச்சிதமான வார்த்தைப் பிரயோகத்தின் மூலம் வாழ்க்கையின் யதார்த்தத்தை மிக இயல்பாகவும்,நேர்த்தியாகவும் ஜே.கே புலப்படுத்துவது Mindblowing.
படிப்போரின் மனதில் கேள்விகளையும்,விவாதங்களையும் எழச்செய்யும் இந்நூல் - தமிழ் இலக்கிய வானில் ஒரு துருவ நட்சத்திரம்!

3.கற்றதும் பெற்றதும் - சுஜாதா


“பிரதமர்,முதல்வர் நாற்காலிகளைக் கூட யார் வேண்டுமானாலும் நிரப்பலாம் இன்று.ஆனால் சில நாற்காலிகளை யாராலும் நிரப்பவே முடியாது.சுஜாதாவின் சிம்மாசனம் அப்படியே ஜ்வலித்துக் கொண்டிருக்கிறது அவரது நினைவுகளை ஏந்திஎன சுஜாதாவின்  ஒன்பதாம் ஆண்டு நினைவு தினத்தன்று தன் முகநூலில் குறிப்பிட்டிருக்கிறார் எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர்.
மனம் கவர்ந்த புத்தகங்களில் சுஜாதாவின் நூல் ஒன்றினைப் பற்றி எழுத வேண்டும் என்று முடிவு செய்துவிட்டுக் குழம்பத் துவங்கினேன். ஸ்ரீரங்கத்துத் தேவதைகளா? விஞ்ஞானச் சிறுகதைகளா?கரையெல்லாம் செண்பகப்பூவா? என் இனிய இயந்திராவா?தலைமைச் செயலகமா?கணையாழியின் கடைசிப் பக்கங்களா? எதை எடுக்க? எதை விடுக்க? ஒவ்வொன்றும் மாணிக்கக் கற்கள்.இருப்பினும் “என்னுடைய  எழுத்துலக வாழ்க்கையில் ‘கற்றதும் பெற்றதும்’ கட்டுரைக்காகவே நான் நினைக்கப்படுவேன்” என்று சுஜாதாவே கூறியிருப்பதால் இந்நூலைத் தேர்ந்தெடுத்தேன்.
தான் கண்டதை, கேட்டதை, உணர்ந்ததை, ரசித்ததை, ருசித்ததை எனப் பலவற்றையும் பற்றி ஒவ்வொரு வாரமும் ஆனந்த விகடனில் பல வருடங்கள் சுஜாதா எழுதிய தொடர் கட்டுரை தான் “கற்றதும் பெற்றதும்”.காலத்தின் கண்ணாடி என்பார்களே...அதற்கு நல்ல உதாரணம்.நான்கு பாகங்களாக வெளி வந்துள்ளது.இப்படி ஒரு தொடர் எழுத வேண்டும் என்ற வித்தியாசமான எண்ணத்திற்காகவே சுஜாதாவிற்கு ஒரு royal salute.
எழுத்தாளராக,விஞ்ஞானியாக,இலக்கியவாதியாக, சராசரி சுகதுக்கங்கள் கொண்ட ஒரு தனிமனிதராக விளங்கிய சுஜாதா...அறிவியல் செய்திகள்,இணையம்,பழந்தமிழ் இலக்கியம், சுயசரிதைக் குறிப்புகள்,பயண அனுபவங்கள், எதிர்காலம், புத்தகங்கள், சினிமா, கவிதைகள், சந்தித்த நபர்கள், சின்னஞ்சிறுகதைகள்,பிறமொழி எழுத்தைப் பற்றிய குறிப்புகள் மற்றும் இன்னபிற ஏராளமான தகவல்களைப் பற்றி எழுதிய தொகுப்பே இந்நூல்.அனைத்து பாகங்களையும் படித்து முடித்த பின் எதைப்பற்றி வேண்டுமானாலும் பேசலாம் போலிருக்கிறதே என்றெண்ணினேன்.அப்படி ஓர் விஷயஞானம் செறிந்த அற்புதக் களஞ்சியமே “கற்றதும் பெற்றதும்”.
சத்யஜித்ரேயின் “பதேர்பாஞ்சாலி” பற்றிச் சொல்லும் போது,உலகம் முழுதும் பாராட்டப்பட்ட அந்தப் படம் அதன் நாவலாசிரியருக்கு திருப்தி தரவில்லை என்கின்ற தகவலைச் சொல்கிறார்.”வாழ்வில் எல்லோரையும் திருப்திப்படுத்தி விட முடியாது” என்கிற நீதியும் கூடவே.
சுஜாதாவின் கதையான “நினைத்தாலே இனிக்கும்” திரைப்படமான தருணத்தில் கண்ணதாசனின் “எங்கேயும் எப்போதும்” பாடல் உருவான விதத்தை சுவை பட விளக்கியிருக்கிறார்.
ஒரு முறை பெங்களூரிலிருந்து சென்னைக்கு ரயிலில் பிரயாணம் செய்த போது தன்னெதிரில் அமர்ந்திருந்த ஒருவர் – சுஜாதாவின் ஒரு நாவலில் பூனையை வில்லன் கொன்று விட்டதற்காக சண்டை போட்டதை எழுதியிருக்கும் விதம் செம humorous.
ஆன்ஜியோகிராமுக்காக அப்போலோவில் அட்மிட் ஆகியிருந்த போது பலரும் தன்னைக் காண வந்ததை,உதவி செய்ததை எண்ணி வியந்து “ஏதோ தமிழில் கிறுக்கினதுக்கு இத்தனை மதிப்பா,இத்தனை சக்தியா” என வியக்கிறார்.
சுஜாதா அவார்டுகளை கவனிக்கும் போது எப்படி இவர் படித்துக் கொண்டு,எழுதிக்கொண்டு,கர்நாடக சங்கீதம் துவங்கி ரேடியோ,டிவி என அத்தனைத் துறைகளையும் கவனித்துள்ளார் என வியப்பு மேலிடுகிறது.
பிறர் எழுதியவைகளில் தனக்குப் பிடித்த கதை, கவிதை (எ.பி.க – எனக்குப் பிடித்த கவிதை),கட்டுரை,ஹைகூ,பொன்மொழி என்று குறிப்பிடுவார் சுஜாதா. சுஜாதாவின் மோதிரக் கையால் குட்டுப்பட்டால் தன் மேல் வெளிச்சம் விழத் துவங்கி விடும் என ஏராளமானோர் தங்கள் படைப்புகளை அனுப்பியிருக்கின்றனர்.இப்படி ஒவ்வொரு வாரமும் தனக்குப் பிடித்த கவிதைகள்,மேற்கோள்கள்,புத்தகங்கள் எனத் தேடித்தேடி அறிமுகப்படுத்த நமக்கு இன்னொரு நல் இதயம் கிடைக்குமா?தமிழை எளிமையாக தனக்கே உரிய மின்சார பாணியில் சுவையோடும்,நேர்த்தியோடும்,சுருக்கமான வாக்கிய அழகோடும் சுஜாதா படைத்த தொடர் கட்டுரையான ‘கற்றதும் பெற்றதும்’ நாம் அனைவரும் படித்துப் பாதுகாக்க வேண்டிய பொக்கிஷம்.தமிழ் மொழியின் பரிணாமம் பற்றிப் பேசும்போது அதில்சுஜாதா தமிழ்என்று பதிவு செய்யும் தகுதி பெற்றது அவரது எழுத்து நடை.Versatile என்கிற வார்த்தைக்கு சுஜாதாவைத் தவிர சிறந்த உதாரணம் வேறு எவர் இருக்க முடியும்? 
  
                 4.பள்ளிகொண்டபுரம் - நீல.பத்மநாபன்



நீல.பத்மநாபனின் தலைமுறைகள் புத்தகத்தைத் தான் அவரது சிறந்த படைப்பாகச் சிலாகித்துக் கூறுவார் பலர்.என்னளவில் மனம் கவர்ந்த புத்தகம் பள்ளிகொண்டபுரம் தான்.பள்ளிகொண்டபுரம்-அனந்தன் நாயர் என்னும் மனிதனின் வாழ்வில் கடைசி இரண்டு நாட்கள் - என்பது படித்து முடிக்கும் வரை எனக்குத் தெரியாது.கதையை உக்கிரம் குறையாமல் சொல்வதற்காகத் தான் அந்த இரண்டு நாட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.வாழ்க்கை முழுவதும் அம்மாதிரி உக்கிர உணர்வுகளுடன் அனந்தன் நாயர் இருந்திருக்க நியாயமில்லை.”இறுதி நாட்களில் தான் அவரது ஆழ்மனம் நிலப்பரப்பை மீறி வெளியே வந்து வழிகிறது.இந்த அம்சத்தை அன்றைய முக்கிய விமர்சகர்கள் எவருமே கவனித்ததாகத் தெரியவில்லைஎன்கிறார் எழுத்தாளர் ஜெயமோகன்.
திருவனந்தபுரம் தான் கதைக்களம் என்றாலும் எங்குமே குறிப்பிடப்படவில்லை. அனந்தன் நாயர் தன்னுடைய ஐம்பதாவது பிறந்த நாளின் அதிகாலையில் கோவிலுக்குக் கிளம்புவதில் தொடங்கும் கதை அடுத்த நாள் இரவுடன் முடிவடைகிறது.இதற்கிடையே அவரின் எண்ணவோட்டங்கள்,சந்திக்கிற மனிதர்கள்,செல்கிற இடங்கள்-இவற்றின் மூலம் முழு வாழ்க்கையும் கூறப்பட்டுள்ளது.
திருவனந்தபுரம் சமஸ்தானத்தில் சாதாரண வேலையில் இருக்கும் அனந்தன் நாயரின் மனைவி கார்த்தியாயினி பேரழகி.அவளுடைய அழகில் மயங்கி மோகம் கொள்கிறான் சமஸ்தானத்தின் உயர்பதவியிலிருக்கிற விக்ரமன் தம்பி.அதனால் அனந்தன் நாயரின் வாழ்க்கையில் வீசும் சூறாவளியே கதையின் ஆணிவேர்.சாதாரண கதை போல் தெரிந்தாலும் நாயகன் மூலம் வாழ்வியலை நாவலாசிரியர் அலசும் விதம் அதியற்புதம்.
ஒரு சராசரி மனிதன் எப்படியெல்லாம் சிந்திப்பானோ அப்படியெல்லாம் சிந்திக்கிறார் அனந்தன் நாயர்.மனைவி பிரிந்து சென்ற பிறகு மகனையும், மகளையும் வளர்க்க நேரும் தன் வாழ்க்கையைத் தியாகமாகவும், மனைவியின் செயலைப் பாவமாகவும் கருதுபவராக இருக்கிறார்.ஆனால் தியாகம்,பெருமை,பொறுப்பு என்று அவர் நினைத்ததெல்லாம் மகன் செயலால் உடையும்போது நொறுங்கிப் போகிறார்.
ஒரு சாமான்யன் தன்னால் எதுவும் செய்ய முடியவில்லையே என்று என்னும் போது ஏற்படும் சுயவெறுப்பும்,அதனால் விளையும் எல்லையற்ற மனநாடகங்களும் இத்தனை கூர்மையாக எந்த நூலிலுமே வெளிப்பட்டதில்லை என்பதோடல்லாமல் எக்காலத்திற்கும் ஏற்ற வகையில் அமைந்த அபூர்வப் படைப்பு.
கடைசியாக அனந்தன் நாயர் மரணமடையும் போது - ஒரு வழியாகத் தப்பித்து விட்டார் என்றே தோன்றியது.அப்படி ஓர் ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது பள்ளிக்கொண்டபுரம்.
என்றாவது ஓர் நாள் நீல.பத்மநாபனைச் சந்திக்க நேரிட்டால் – நான்
அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் இளங்கலை வேளாண்மை பயின்ற போது அவரது கடைசி மகள் கவிதா எனக்கு ஒரு வருடம் சீனியர் மற்றும் தோழி என்ற செய்தியையும், பள்ளிகொண்டபுரம் நாவலிற்கான பாராட்டுதலையும் தெரிவிக்க உத்தேசித்துள்ளேன்.

5.எட்டுத் திக்கும் மதயானை - நாஞ்சில் நாடன்


தஞ்சாவூர் பாவேந்தர் நூல் நிலையத்திற்குப் போவதென்பது காதலியைச் சந்திக்கச் செல்லும் போது நேரும் பரவச நிலைக்கு ஒப்பானது.பாவேந்தரில் தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களில் நாம் தேடும் முக்கியமானவை அனைத்தும் கிடைக்கும் என்பதே காரணம். ஒரு முறை அங்கு சென்ற போது நாஞ்சில் நாடனின் எட்டுத் திக்கும் மதயானை புத்தகம் என் கண்ணில் பட்டது,தமிழின் சிறந்த நூல்களில் ஒன்று என்று எங்கேயோ படித்தது ஞாபகத்துக்கு வந்தது.எடுத்துப் புரட்டிக் கொண்டிருந்தேன்.அங்கு பணிபுரிபவர் இதைப் பார்த்து விட்டு,சார் இந்தப் புத்தகம்  வாசித்து விட்டீர்களா என்று கேட்டார்.’இல்லை என்றேன்.என்ன சார், இவ்வளவு புத்தகம் படிக்கிறீங்க,எட்டுத்திக்கும் மதயானையை எப்படிப் படிக்காம விட்டீங்க?என்றார்.அவர் சொன்னதனால் மட்டுமின்றி நாவலின் தலைப்பும் என்னைக் கவர்ந்ததால் படிப்பதற்காக எடுத்துச் சென்றேன்.
தலைப்பே பாதி கதையைச் சொல்லிவிடும்.எட்டுத்திக்கும் மதயானை முற்றுகையிடுவது போன்ற சூழலில் நாயகன் பூவலிங்கம் சிக்கிக் கொள்ள அதிலிருந்து அவன் எங்ஙனம் தப்பிக்கிறான் என்பதே கதை.பாரதியார்ரௌத்திரம் பழகுஎன்று சொன்னதற்கேற்ப வாழும் பூவலிங்கம்,அதன் விளைவாகவே தன் உயிரைக் காத்துக் கொள்ள யாரிடமும் சொல்லிக் கொள்ளாமல் நாஞ்சில் நாட்டிலிருந்து கிளம்பி ஆந்திர மாநிலம் போய் அங்கிருந்து கர்நாடகாவில் தஞ்சமடைந்து இறுதியாக மும்பையை  அடைகிறான்.தன் மனிதநேயத்தைத் தொலைக்காமல் இருக்க அவன் சந்திக்கும் பிரச்னைகள் கொஞ்ச நஞ்சமல்ல. வாழ்க்கையில் துயரங்கள் ஒரு எல்லையைத் தாண்டும்போதுடெம்போவாங்கி எங்காவது வாழலாம் என பூவலிங்கம் எண்ணுகிறான்.பூவலிங்கத்தை யார் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்? அவன் வேறு யாருமல்ல,நாமே தான். பூவலிங்கத்தின் மூலம் நம்மைப் பற்றி நாமே மறுபரிசீலனை செய்து கொள்ள வழிவகுக்கிறார் நாஞ்சில் நாடன்.என்னால் உறுதியாய்க் கூறமுடியும்.கதை நடக்கும் களங்களிலெல்லாம் நாஞ்சில் நாடன் வாழ்ந்திருக்கிறார்.இல்லையெனில் இவ்வளவு துல்லியமாக எழுத சாத்தியமே இல்லை.
2005 ஆம் ஆண்டு இந்த நாவலைப் படித்தேன், படித்துப் பன்னிரெண்டு வருடங்களாகியும் மனதில் நீக்கமற நிறைந்திருக்கிறது இந்நூல்.”எட்டுத் திக்கும் மதயானைஎன்னும் உன்னதப் படைப்பின் மூலம் சிறந்த தமிழ் எழுத்தாளர்களின் பட்டியலில் இடம் பிடிக்கிறார் நாஞ்சில் நாடன்.

6.துணையெழுத்து - எஸ்.ராமகிருஷ்ணன்


பெரும்பாலும் மாத,வார இதழ்களில் வரும் போது தொடர்கதைகளையோ, கட்டுரைகளையோ நான் விரும்பிப் படிப்பதில்லை.அவை புத்தக வடிவம் பெற்ற பின் வரும் விமர்சனங்களையும்,நண்பர்களின் கருத்துகளையும் கேட்டறிந்த பின்பே வாசிப்பேன்.நிற்க. ஒரு முறைஆனந்த விகடன்வாசித்துக் கொண்டிருந்த போது யதார்த்தமாக ஒரு கட்டுரையின் சில வரிகளைப் படிக்க நேரிட்டது.அசந்து போய்விட்டேன்.இதயத்தை வருடிக் கொடுத்து,மனதை மெல்லிய இறகாக்கி,பேரன்பால் பரவசப்படுத்திய அந்த எழுத்துக்குச் சொந்தக்காரர் யார் என்று பார்த்த போது தான் தெரிந்தது அவர் எஸ்.ராமகிருஷ்ணன் என்று.ஆம் துணையெழுத்து என்னும் அந்தத் தொடர்  கட்டுரையை வாராவாரம் வாசிக்க ஆரம்பித்தேன்.புத்தகமாக வந்த போது ஓடிப்போய் முதல் ஆளாக வாங்கியது மட்டுமல்லாமல் எனக்கு நெருக்கமானவர்கள் பலருக்கும் பரிசளித்தேன்.நெடுங்குருதி,எனது இந்தியா,சிறிதுவெளிச்சம்,கதாவிலாசம்,தேசாந்திரி,ஆதலினால்,கேள்விக்குறி எனத் தொடர்ந்து  எஸ்.ராமகிருஷ்ணனின்  நூல்களாய்த் தேடிப்போய் வாங்கிப் படிக்க வைத்து,என்னை அவரது தீவிர வாசகனாக்கியது துணையெழுத்து.
தன் பயணத்தின் வாயிலாகத் தான் பெற்ற வாழ்வியல் அனுபவங்களின் கட்டுரைகளே இந்நூல்.துணையெழுத்து மூலம் தன் வாழ்வைத் தானே அவிழ்த்துப் பார்த்துக் கொண்டதாகச் சொல்கிறார் எஸ்.ராமகிருஷ்ணன்.
ஊர்கள்,நகரங்கள்,குகைகள்,இடிபாடுகள்,கானகங்கள் எனத் திசையில்லாமல் சுற்றி அலைந்து,முகம் தெரியாத மனிதர்களிடையே வாழ்நாளின் பாதியை கழித்து - சாலையோரங்கள், ரயில்நிலையங்களில் தங்கியது என்பனவற்றையெல்லாம் பற்றி அவர் பதிவு செய்திருக்கும் ஒப்பற்ற நூலேதுணையெழுத்து”.ரிஷிகேஷ்,நைனிடால் பயணங்கள்,’ஐந்தாம் வகுப்பு நல்ல முத்து,’சமையல்காரர்’ திருலோகம்,’சேவல்’ செல்லையாஎன அவரது பயணங்களும்,சந்தித்த மனிதர்களும் நம்மைக் கவர்ந்திழுத்தாலும்...நண்பனுக்காக அவன் காதலியின் வீட்டின் முன் ஓர் இரவு முழுவதும் அவனுடன் காத்துக் கொண்டிருந்த அனுபவத்தை விளக்கியிருப்பார் பாருங்கள் Simply superb.
இந்தப் புத்தகத்தைப் படிக்காமல் உங்கள் வாழ்நாளை நீங்கள் கடந்து விட்டால் வாழ்வில் முக்கியமான  ஒன்றை இழந்தவராகவே கருதுவேன்.

7.கருவாச்சி காவியம் - வைரமுத்து


எங்களை வளர்ப்பதற்கு அன்னை சந்தித்த போராட்டங்களையும்,சோதனைகளையும் சிறு வயது முதலே கண்டு வளர்ந்த என்னை வேறெந்தப் புரட்சிப் பெண்களின் சாதனைக் கதைகளும்,புனைவுகளும் வெகுவாகக் கவர்ந்ததில்லை.ஒரே விதிவிலக்கு கவிப்பேரரசு வைரமுத்துவின்கருவாச்சி காவியம்.
“பிறந்த பயன்களில் ஒன்று என்றே இந்தக் காவியத்தைக் கருதுகிறேன்” என்கிறார் வைரமுத்து.மேலும்தமிழில் சிலப்பதிகாரமும்,மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று இலக்கிய வரலாறு பேசுகிறது.”கள்ளிக்காட்டு இதிகாசம், “கருவாச்சி காவியம் இரண்டும் என்னளவில் இரட்டைக் காப்பியங்கள் என்று தான் என் இதயம் வலித்துக் கொண்டே நினைக்கின்றதுஎன்றும் குறிப்பிடுகிறார்.முன்னது ஆணுக்கும்,பின்னது பெண்ணுக்குமான வாழ்வியல் போராட்டம்.கள்ளிக்காட்டு இதிகாசத்தின் பேயத்தேவரும்,கருவாச்சி காவியத்தின் கருவாச்சியும் கற்பனைக் கதாபாத்திரங்கள் அல்ல.இருவரும் கவிஞரின் வாழ்க்கையோடு சம்பந்தப்பட்டவர்களே.கருவாச்சியின் முற்பகுதி வாழ்க்கை கவிஞரின் குடும்பத்துக்குள் நிகழ்ந்த நிஜம்,பிற்பகுதி வாழ்க்கையோ அவரது கிராம வெளிகளில் வெவ்வேறு பெண்கள் வெவ்வேறு காலங்களில் வாழ்ந்து தொலைத்த வாழ்க்கை.
திருமணமாகி பதினோரு நாட்களிலேயே பழைய பரம்பரைப் பகையில் கணவனால் விலக்கி வைக்கப்படும் கருவாச்சி தனக்கு இழைக்கப்படும் கொடுமைகளையும்,இன்னல்களையும் எங்ஙனம் தைரியமாக எதிர்கொள்கிறாள் என்பதே இக்கதையின் சாராம்சம்.
கிராமப்புறங்களில் நடக்கும் சடங்குகள்,நம்பிக்கைகள், காதல்,வைத்தியம், இயலாமை,உக்கிரம் மற்றும் பன்னி அடிப்பது,அயிரமீன் பிடிப்பது,குடிசை கட்டுவது,நகை செய்வது எனப் பல செய்திகளை லாவகமாகச் சொல்லிச் செல்கிறது இந்நூல்.
நாவலின் 16 வது அத்தியாத்தில் அத்துவானக் காட்டில் இடுப்பு வலி எடுத்து தன்னந்தனியாகக் கருவாச்சி பிள்ளை பெற்றதைக் கவிஞர் எப்படி எழுதினார் என்பது வியப்புக்குரிய ஒன்று.ஒரு பெண்ணின் பிரசவ வலியை ஓர் ஆண் எப்படி உணர முடியும்? தொடராக வெளி வந்த போதே அநேகரின் பாராட்டுதலைப் பெற்றது இந்த அத்தியாயம் - குறிப்பாகப் பெண்களிடமிருந்து. உண்மையாகவே நடுக்காட்டில் யார் துணையுமின்றி பிள்ளை பெற்ற ஓர் பெண்ணைத் தேடி போய் சந்தித்திருக்கிறார் கவிஞர்.”தனியொருத்தியாய் எப்படி பிள்ளை பெற்றாள் என்பதை மண்டியிட்டுக் காட்டினாளே அந்த மாதரசி - அழுகையே வந்துவிட்டது எனக்குஎன்கிறார்.
கருவாச்சி தன் வாழ்வில் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியிலும் சதிப்பின்னல்களும்,துரோகங்களும்,பிரச்னைகளும் இடி போல் இறங்குகிறது.எல்லாவற்றையுமே அனுபவமாகவும்,பாடமாகவும் எடுத்துக் கொள்ளும் அவளைத் தேடி வருகிறார் ஒரு சாமியார்.கருவாச்சியின் ஞானத்தைக் கணடு வியந்து அவள் காலில் விழுந்து வணங்கிப் போகிறார்.
எல்லாரையும் அழிச்சுட்டு ஒரு ஆள் மட்டும் பொழைக்கிறதா செயிக்கிறது? எல்லாரையும் பொழைக்க விட்டுட்டு தானும் பொழைக்கிறது தானே செயிக்கிறது?” என்கிறாள் கருவாச்சி.உண்மைதானே!

8.ஆழி சூழ் உலகு - ஜோ டி குருஸ்


ஜோ டி குருஸ் எழுதிய  “ஆழி சூழ் உலகு புத்தகத்தினை நான் வாசித்ததே ஓர் சுவாரஸ்யமான,சுவையான விஷயம் தான்.ஒரு முறை ஆனந்த விகடனில் நான் கேட்ட கேள்விக்கு எழுத்தாளர் நாஞ்சில் நாடன் பதிலளித்திருந்தார்.அந்த பதிலில் ஜோ டி குருஸ் அவர்களின் ஆழி சூழ் உலகு,”கொற்கை மற்றும் இரா.முருகவேளின்மிளிர் கல்ஆகிய புத்தகங்களைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தார்.அப்போதே இந்த நூல்களைப் படிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன்.எனவே ஆழி சூழ் உலகுநூலினை நான் வாசிக்கக் காரணமாயிருந்த நாஞ்சில் நாடனுக்கு நன்றி.கதையின் காலம் 1933 முதல் 1985 வரை. ஓர் ஆச்சரியமான உண்மை என்னவெனில் இது வரை கடல் குறித்து எழுதியவர்கள் எவருமே பரதவர் அல்ல.பரதவரான ஜோ டி குருஸ் அம்மக்களின் மூன்று தலைமுறை வாழ்க்கையை உயிர் கசிய எழுதியிருக்கிறார்.ஒரு கடலோடியால் தான் இப்படிப்பட்ட புத்தகத்தை எழுத முடியும் என்பதை உணர்ந்து கொண்டேன்.
வட்டார வழக்குச் சொல் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தாலும் கதையின் இறுதியில் வட்டார வழக்குச் சொல் அகராதிகொடுத்துள்ளார்.பத்து பதினைந்து பக்கம் தாண்டியதுமே நாவலின் நடை பழக்கப்பட்டு விடுகிறது.
நாவலின் துவக்கத்தில் தொம்மந்திரையுடனும், கோத்ராவுடனும்,போஸ்கோவுடனும் கட்டுமரத்தில் நானும் ஏறிக்கொண்டேன் இறுதி வரை நெய்தல் நிலத்திலேயே வாழ்ந்தது போல் ஓர் உணர்வு.கதை முடிந்தவுடன் கடல் மண் என் மேல் ஒட்டியிருந்தது போல் ஒரு பிரமை.ஆமந்துறையிலேயே சில காலம் வாழ்ந்தது போல் ஒரு மயக்கம்.
என் ஆராய்ச்சி சம்பந்தமாக கடந்த வருடம் தூத்துக்குடி போன போதுகதையில் வரும் அதே சவுத் ராஜா தெருவுக்குச் செல்ல நேர்ந்தது.எவ்வளவோ வருடங்களாகியும் ஜோ டி குருஸ் வர்ணித்திருந்ததைப் போலவே பழமை மாறாமல் இருக்கும் அத்தெருவினைக் கண்டு சிலிர்த்தேன்.
கதை மாந்தர்களின் எண்ணம்,செயல்கள்,வன்மம்,அச்சம்,துயரம் போன்றவற்றை எழுதியிருக்கும் விதம் மனதை அலைக்கழிக்கிறது.உரையாடல்கள் அனைத்தும் வெகு இயல்பாக இருக்கின்றது.எங்குமே நாவலாசிரியரைக் காண முடியவில்லை.அனைத்தும் பாத்திரங்கள் மூலமே கடத்தப்படுகின்றன இருப்பினும் அவரையுமறியாமல் அவரது ஆதங்கம் வெளிப்படும் இடங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
என் சமூகத்தில் உள்ள அவலங்களை,கோளாறுகளை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகப்படுகிறது.”ஆழி சூழ் உலகு நாவல் வெளி வந்த பிறகு ஊரில் நிறைய எதிர்ப்பு வந்தது,வந்து கொண்டிருக்கிறது.மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காகத் தான் சமூகக் குறைகளைச் சுட்டிக் காட்டுகிறேன். எதிர்ப்புகள் பற்றிக் கவலைப்படுவதில்லைஎன்கிறார் ஜோ டி குருஸ். நாவலைப் படித்த போதே - இவ்வளவு துணிச்சலாக எழுதியிருக்கிறாரே...பிரச்னைகளைச் சந்திக்க வேண்டி வருமே என எண்ணினேன்.
கடலிலும்,கரையிலும் பரதவர்களின் வாழ்க்கைப் போராட்டத்தை அளப்பரிய ஆழத்துடனும்அலைகளுடனும்,   வலிகளுடனும், வண்ணங்களுடனும், தைரியமாகப் பதிவு செய்திருக்கும் இந்நூல் - என் மனதைக் கவர்ந்த நூல்களினுள் ஒன்றாக இடம் பிடிக்கிறது.

9.காடு - ஜெயமோகன்


ஒரு விடுமுறையில் சென்னையில் பணிபுரியும் நண்பன் முருகானந்தம் தஞ்சாவூர் வந்திருந்தான்.வழக்கம் போல் அவன்,நான்,வெங்கி மூவரும் தஞ்சைப் பெரியகோயிலில் அந்தி நேரம் சந்தித்தோம்.முருகானந்தம் எழுத்தாளராக பதிமூன்று புத்தகங்களைப் பல்வேறு தலைப்புகளில் எழுதியுள்ளான்.வாசிப்பதற்குச் சில புத்தகங்களைப் பரிந்துரைக்குமாறு கேட்டேன்.அவன் சொன்ன புத்தகங்களில் நான் படிக்காததாக இருந்தது ஜெயமோகனின்காடு”.’படித்துப்பார், ஒரு காட்டுக்குள் வசித்து வந்த அனுபவம் கிடைக்கும் என்றான்.உடனே வாங்கிப் படித்தேன்.உண்மைதான். நெய்தல் நிலத்திற்கோர் ஆழி சூழ் உலகுஎன்றால் குறிஞ்சி நிலத்திற்கோர்காடு”. அது கடலோடியின் வாழ்க்கை,இது காடோடியின் வாழ்க்கை.
காடு கதையின் களம் தமிழ்நாடு-கேரளா எல்லையிலுள்ள மலைக்காடு என்பதால் மலையாள உரையாடல்கள் மிக அதிகம்.துபாயில் பதினைந்து வருடங்கள் வசித்த காரணத்தினால் எனக்கு மலையாளம் புரிந்து கொள்வதில்  பிரச்னையில்லை.மற்ற வாசகர்கள் எப்படிப் படித்திருப்பார்கள் என வியந்தேன்.”அது மலையாள மொழி அல்ல.பழங்குடிகளின் மொழி.அந்த மக்களை அந்த மொழியில் இருந்து பிரிக்க முடியாது.சுத்தத்தமிழில் பேசினால் அந்த மக்கள் அவர்களின் சாயலில் இருப்பார்களா என்ன? வாசிப்பு என்பது ஒரு புத்தகம் உங்களிடம் வருவதல்ல.நீங்கள் ஒரு புத்தகத்திற்குள் செல்வது தான்என்கிறார் ஜெயமோகன்.ஏற்றுக்கொள்ளக் கூடிய கருத்து.இந்நாவலின் வாசிப்பினூடாக நாம் பெறும் பேரனுபவம் வார்த்தையில் அடங்காதது.வர்ணனைகளை எல்லாம் ரசித்து,லயித்து,அனுபவித்து எழுதியிருக்கிறார்.
நட்சத்திரங்களை ஏறிட்டுப் பார்த்தேன்.பிரம்மாண்டமான ஓர் அலங்காரக்கூரை.அற்பனும், அபத்தமானவனுமான மனிதன் என்ற பிராணிக்கு சற்றும் தேவையில்லாத ஆடம்பரம்.”
இத்தனை வருடங்களில் அந்த நாளின் அந்த நிமிடங்களை எத்தனை ஆயிரம் முறை மனதால் சென்று தொட்டிருப்பேன்
-இப்படி எவ்வளவோ.
பாலுறவு கட்டற்றுப் போய்….ஒழுக்கம் என்கின்ற கோட்பாடே இல்லையோ என்கிற கேள்வி எழாமலில்லை.உயிர் வாழ்வதே பெரும் போராட்டமாக இருக்கும் குறிஞ்சி நிலத்தில் இதனை எளிய கேளிக்கையாகவோ,கனவற்ற அப்பட்டமான யதார்த்தமாகவோ தான் பொருள் கொள்ள வேண்டியிருக்கிறது.பல்வேறு பாத்திரங்களின் மூலம் காட்டில் ஒளிந்திருக்கும் அத்தனை சுவாரஸ்யங்களையும் மர்மங்களையும்,
காலமாற்றத்தின் விளைவுகளையும் உணரவைக்கும் ஜெயமோகன்,காட்டின் கனமழை,சாரல்,அயனிமரம்,உயரமான மலைகள் ,நீர்வீழ்ச்சிகள், ஓடைகள், மிளாக்கள், யானைகள்,மான்கள்,குறிஞ்சிப்பூக்கள் ஆகியவற்றின் மூலம் நம் மனத்திரையில் விரியச் செய்யும்அழகியல்ஈடு இணையற்றது.
கிரிதரன்-நீலி சந்திப்புகள் - வாழ்வில் ஒரு முறை மட்டும் வந்து மறையும் முதற்காதலின் சித்திரம்.
நாவலைப் படிக்கும் எவராயினும் மலைக்காட்டிற்கோர் பயணத்திற்குத் திட்டமிடும் சாத்தியக்கூறுகள் அதிகம்.நாவலின் வெற்றியும் அதுவே.

10.வட்டியும் முதலும் - ராஜூ முருகன்


புத்தக வாசிப்பின் மேல் நான் கொண்டுள்ள தீராக்காதலுக்கு முக்கிய காரணகர்த்தாவாக விளங்கும் என் சித்தியுடன் ஒரு முறை பேசிக் கொண்டிருந்த போது தனக்குப் பிடித்தமான எழுத்தாளராக தி.ஜானகிராமனைச் சொன்னார்.கல்கியை விடவா அவர் சிறந்த எழுத்தாளர் எனக் கேள்வி எழுப்பினேன். கல்கி சிறந்த எழுத்தாளர் தான். ஆனால் பிடித்தமான எழுத்தாளரென்றால் அது தி.ஜா தான் எனக் கூறினார். சிறந்ததற்கும்,பிடித்தமானதற்குமான வித்தியாசத்தைப் புரிந்து கொண்டேன்.அதே போல் அநேக சிறந்த புத்தகங்களைப் படித்திருந்தாலும் மனதிற்குப் பிடித்தமான புத்தகத்தில் ஒன்று தான் ராஜுமுருகனின்வட்டியும் முதலும்”. புதுமைப்பித்தன்,ஜெயகாந்தன்,அசோகமித்திரன் ஆகியோரின் புத்தகங்களுக்குப் பிறகு சாமான்யனின் வாழ்க்கையைப் பற்றி அற்புதமாக எழுதப்பட்ட புத்தகம் இதுவே.தன் வாழ்வியல் அனுபவங்களையும்,துயரமும்...நம்பிக்கைகளும் கலந்து நகரும் உலகையும்,மனித உணர்வுகளின் அத்தனை விதமான வெளிக்காட்டல்களையும் சேர்த்து சிறப்பானதொரு படையல் அளித்திருக்கிறார் ராஜுமுருகன்.எல்லாக் காலங்களிலும் தான் கடந்து வந்த மனிதர்களையும்,மறக்க முடியாத அனுபவங்களையும் உயிரோட்டத்துடன் தீட்டியுள்ளார்.மூன்றாம் வகுப்பு பள்ளித் தோழி,ஐஸ் வண்டி அண்ணன்,ட்யூஷன் அக்கா,கோவில் பிச்சைக்காரன், துப்பாக்கி பொம்மை வாங்கித் தந்த மாமா,நீச்சல் கற்றுத் தந்த தாத்தா,கஷ்ட காலத்தில் உதவிய நண்பன்,கடைசி பெஞ்ச் தோழன்,கல்யாணத்திற்கு பத்திரிக்கையும் கொடுத்து விட்டு வரவை எதிர் நோக்காத காதலி...இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம்.அதே சமயம் தஞ்சை மண்ணுக்கே உரிய கேலிக்கும் கிண்டலுக்கும் குறைவில்லை.
இரண்டாம் அத்தியாயமானபெண் மனசு” fantastic. நுட்பமான பெண் மனதைப் பற்றிய படுதுல்லியமான அவதானிப்பு. குறிப்பாகத் தன் பள்ளித் தோழியின் அழைப்பின் பேரில் அவரின் குழந்தையின் பிறந்தநாள் விழாவுக்கு போன போது இருவரிடையேயும் நிகழும் உரையாடல் மனதை என்னவோ செய்தது. புத்தகத்தில் பிடித்த வரிகளைப் பற்றிக் குறிப்பிட வேண்டுமென்றால் மொத்தப் புத்தகத்தையுமே தான் சொல்ல வேண்டும்.இருப்பினும் மிகவும் ஈர்த்த வரிகளில் ஒன்று -
காலம் ஒருவனை எப்படி எல்லாம் துரத்தி அடிக்கிறது? நினைத்துப் பார்க்காத பாதைகளில் காலம் நடத்தும் மாயப் பயணங்களில் எத்தனை ஆட்டுக்குட்டிகள் வழி தவறிப் போய் இருக்கும்! அடித்து இழுத்துப் போய் எங்கெங்கோ வீசி எறிந்து விட்டு ஓடிக்கொண்டே இருக்கிறது காலத்தின் தீரா வெள்ளம்!”
ஒரு சோறு பதம்!