
முகநக நட்பது நட்பன்று நெஞ்சத்து
அகநக நட்பது நட்பு
- என நட்பிற்கு இலக்கணம் வகுக்கிறார் வள்ளுவர்.
நட்பு - தோழமை - சிநேகம் என்பது இருவரிடையே அல்லது பலரிடையே ஏற்படும் ஓர் இனிய உறவு. வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றிப் புரிந்து கொள்ளுதலையும், அனுசரித்தலையுமே அடிப்படையாகக் கொண்டது. காதல் என்னும் உறவு எவ்வாறு நம் மனதிற்குள் பூ பூக்கச் செய்கிறதோ அவ்வாறே நட்பெனப்படுவது நம் மனதுள் புத்துணர்ச்சியைப் பொங்கச் செய்கிறது. ஏனெனில் இவ்விரு உறவுகளும் நாமாகத் தேர்ந்தெடுத்துக் கொள்வது... மற்றவையனைத்தும் நமக்கு இயற்கையாய் அமைந்த உறவுகளே. நண்பர்கள் இல்லாத வாழ்க்கை நரம்பற்ற வீணைக்குச் சமம். ஆழமான அன்பே அழுத்தமான நட்புக்கு அணிகலன்.ஒரு நண்பன்
ஒரு நூலகத்திற்குச் சமம். அவன் தந்தையைப்போல் இடித்துரைப்பவன்; தாயைப்போல் ஈடில்லா
அன்பு கொண்டவன்.
புராணக் கதாபாத்திரத்தில் நட்பிற்குப் பெயர் பெற்றவன் கர்ணன். பெற்ற தாயால் குழந்தையிலேயே புறக்கணிக்கப்பட்டு தேரோட்டி மகனாக வளர்ந்தவன். பிறப்பறியாப் பாவத்துக்காகப் பழி சுமந்து நின்றவன். வில்வித்தையில் அர்ஜுனனுக்கு நிகரானவன். விஜயனுக்கு எதிராக வில் எடுத்த போது, கீழ்குலத்தில் பிறந்தவனுக்கு ஆயுதம் ஏந்தும் அருகதை இல்லை என்று கிருபாச்சாரியாரால் அவமானமுற்றவன். 'வேள்வித்தீயில் இடப்படும் பொருளை எடுத்து உண்ணும் உரிமை நாய்க்கு இல்லை' என்று பீமனால் ஏளனம் செய்யப்பட்டவன். அவனது இழிநிலை துடைத்து அங்கதேசத்தின் அரசனாக அவனுக்குப் பட்டம் சூட்டினான் துரியோதனன். இருவரும் நட்பிற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்கள். ஆயிரம் குறைகளை உடையவனாகத் துரியோதனன் விளங்கினாலும் கர்ணனிடம் அவன் காட்டிய அன்பும், நட்பும் என்றும் வியப்புக்குரியது.குருஷேத்திரத்தில் போர் மூளும் சூழல் உருவானது. 'பாண்டவர்கள். வெற்றி பெற வேண்டுமெனில், கர்ணனை எப்படியாவது அழைத்து வா' எனக் குந்திக்கு ஆலோசனை வழங்கினான் கண்ணன். பதின்வயதில் கர்ணனைப் பெற்றெடுத்து ஊர் உலகத்துக்கு அஞ்சி ஆற்றில் கைவிட்ட அந்தத் தாய், அவனைச் சந்தித்துப் பாசமழை பொழிந்தாள். 'நீ தேரோட்டி மகன் இல்லை. நீதான் என் முதல் மகன். பாண்டவர்களுக்கு மூத்தவன். கௌரவர்களைக் கைவிட்டுப் பாண்டவர் படைக்குத் தலைமை ஏற்க வா!' என்று அழைத்தாள். அப்போது கர்ணன் குந்திக்குச் சொன்ன பதில் என்ன தெரியுமா? "தாயே நீ சொல்லும் பாதையில் நான் செல்லத் துணிந்தால், நட்புத்துரோகம் இழைத்த பாவியாவேன். என்னைப் பெற்றவள் நீ. ஆனால் ஒரு தாய்க்குரிய எந்தக் கடமையையும் எனக்கு நீ செய்யவில்லை. இன்று உன் சுயநலத்திற்காகவே என்னிடம் சொந்தம் கொண்டாடுகிறாய். என் நண்பன் துரியோதனனுக்கு நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். அந்தக் கடனைத் திருப்பிச் செலுத்தும் காலம் நெருங்கி விட்டது. மனிதர்கள் தங்கள் தேவைகள் நிறைவேறும் வரை நட்பு செய்து, கைம்மாறு செலுத்த வேண்டிய சமயத்தில் நட்பை மறந்து திசை மாறி நடந்தால், அந்தப் பாவிகளுக்கு மண்ணிலும், விண்ணிலும் நற்கதி கிடைக்காது என்று சாத்திரம் சொல்கிறது. எதன் பொருட்டும், எவர் பொருட்டும் என் நண்பனுக்குத் துரோகம் செய்ய என்னாலாகாது!" என்றான். தாயும், தம்பிகள் அனைவரும், அஸ்தினாபுரத்து அரசும் தன்னைத் தேடி வந்த போது நண்பனுக்காக மறுத்து, பதினாறாம் நாள் மகாபாரதப் போரில் நண்பனுக்காகத் தன் உயிரேயே கொடுத்தான் கர்ணன்!
நான் பால்யத்தில் பல்வேறு பள்ளிகளில் படித்திருந்தாலும் 80களில் தஞ்சை KHS-ல் படித்த காலம் ஓர் பொற்காலம்!.தோழர்களுடனும் தோழிகளுடனும் படித்த அந்தக் Co-Education பள்ளித் தருணங்களில் ஒவ்வொரு நாளும் நினைவு கூறத்தக்கவை.இருப்பினும் இப்போது போல் Whatsapp,Internet,Email எதுவும் இல்லாத காலகட்டமாதலால் நண்பர்கள் அனைவரும் கல்லூரி- குடும்பம்- எனச் செட்டிலான பிறகு தொடர்பே இல்லாமல் போய் விட்டது.மூன்றாண்டுகளுக்கு முன் ஒரு பின்மதிய நேரத்தில் திருவண்ணாமலைக்குப் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தேன். அப்போது புதிய எண்ணிலிருந்து ஒரு அலைபேசி அழைப்பு வந்தது.பேசியது என் பள்ளித்தோழன் அசோக்.கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்குப் பிறகு அவனுடைய குரலைக் கேட்டதும் வியப்பிலும், சந்தோஷத்திலும் எனக்கு என்ன பேசுவதென்றே தெரியவில்லை.என் அலைபேசி எண்ணை எனது தம்பியை யதேச்சையாக சந்தித்த போது வாங்கியதாகக் கூறினான்.மேலும் KHS பள்ளிதோழர்கள் அனைவரும் ஒரு Whatsapp Groupல் இருப்பதாகக் கூறியதோடல்லாமல் என்னையும் அந்த Groupல் சேர்த்தான். சாம்பி என்கிற வெங்கி,முருகானந்தம்,செல்வம்,ஜெயந்தி,லதா,காயத்ரி,வெங்கடேசன் எனப் பால்ய நண்பர்கள் ஒவ்வொருவராகப் பேச ஆரம்பிக்க('96 திரைப்படத்தில் வரும் காட்சியைப் போலவே!) சூழ்நிலை மறந்து பயணத்தையும் மறந்து பேசினேன்-பேசினேன்-பேசிக்கொண்டேயிருந்தேன்.முப்பதாண்டு கால இடைவெளியில் நண்பர்களுடன் பேசுவதற்கு விஷயங்கள் இருந்துகொண்டே இருந்தது.பிறகு 24x7 நண்பர்கள் அனைவரும் தொடர்பில் இருந்தோம்.ஒரு நாள் வேலைப்பளுவினால் Group-க்கு வராமல் விட்டு விட்டால் நூற்றுக்கும் மேற்பட்ட மெசேஜ்கள் அள்ளித் தெளிக்கப்பட்டிருக்கும்.எங்கள் நட்பு மீண்டும் மலரத் தொடங்கியது.முப்பது வருட இடைவெளி விழுந்த மாதிரியே தெரியவில்லை.நான் எழுதும் கட்டுரைகளை அவர்களுடன் பகிர்ந்து கொண்டேன்.அதற்கு நண்பர்கள் அளித்த ஊக்கம் என்னை மென்மேலும் எழுதத் தூண்டியது.கெட்-டு-கெதர்(Reunion) வைத்துக் கொள்ளலாம் என்று முடிவெடுத்தோம்.ஒவ்வொருவரும் வெவ்வேறு நாடுகளில்,மாநிலத்தில்,நகரங்களில் இருந்தபடியால் அனைவரும் வர ஏதுவாக August 5,2016 தேதியை முடிவு செய்தோம்.அன்று நாங்கள் படித்த பள்ளிக்குச் சென்று முதல்வரையும்,ஆசிரியர்களையும்,மாணவர்களையும் சந்தி்த்து உரையாடுவது எனவும் அதற்கடுத்த நாள் August 6 அன்று ஹோட்டலில் party கொண்டாடுவது எனவும் முடிவானது.Reunion-க்கான ஏற்பாடுகளில் ஒவ்வொருவருக்கும் பங்குண்டு எனினும் அனைத்தையும் முன்னின்று செவ்வனே நடத்திக் காட்டினான் பிரகாஷ்.எங்கள் குரூப்பின் அட்மின் ஆன அவன் Bahrain-ல் மிகப்பெரிய தொழிலதிபராகச் செட்டிலாகி இருந்தான்.அவனின் பெற்றோர் எங்கள் பள்ளியில் நாங்கள் படித்த காலத்தில் ஆசிரியர்களாக இருந்தவர்கள்.Reunion தேதி எப்போது வரும் என்ற ஆவல் எதிர்பார்ப்பு எல்லோருக்குமே இருந்தது.August 5 அன்று காலை 9 மணிக்கெல்லாம் பள்ளிக்கு வந்து விட வேண்டும் என்று தான் ஏற்பாடு.சரியான நேரத்திற்கு சென்று விட்டேன்.மிகவும் இளமையாக உணர்ந்தேன்,சிட்டுக்குருவியாய்ச் சிறகடித்தேன்.பள்ளியின் முன் இறங்கியதும் படபடவென மனது அடித்துக் கொண்டது. எல்லோரையும் புகைப்படத்தில் பார்த்திருந்தாலும்,வாட்ஸப்பில் பேசிக் கொண்டிருந்தாலும் ஏதோ ஒரு படபடப்பு இருக்கத்தான் செய்தது.+2 வகுப்பறையில் எல்லோரும் குழுமி இருக்கின்றார்கள் என்ற செய்தி தெரிய வந்ததும் நேராக அங்கு சென்றேன்.வகுப்பில் நுழைந்து நீண்ட நெடிய வருடங்களுக்குப் பிறகு நண்பர்களைப் பார்த்த அந்த வினாடி...பெருவாழ்வின் நீண்ட கணங்களில் எப்போதாவது தான் இப்படியான தருணங்கள் வாய்க்கும்.வாவ்...எத்தனை முகங்கள்...என்னால் நம்பவே முடியவில்லை...முகமெல்லாம் மலர...யாரை முதலில் பார்ப்பது,பேசுவது என்றே தெரியவில்லை.ஒரு நிமிடத்தில் எல்லோர் முகத்தையும் கண்கள் படம் பிடித்து மூளைக்கு அனுப்பியது.அதை கிரகிக்கும் வேகம் தான் மூளைக்கு இருக்கவில்லை.நாங்கள் படித்த போது இருந்த அத்தனை ஆசிரியர்களும் ஓய்வு பெற்றுவிட்டனர்.இருப்பினும் தற்போது பணிபுரியும் தலைமையாசிரியர் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் எங்களை அன்புடன் வரவேற்று மகிழ்ந்தனர்.அனைவருக்கும் நாங்கள் விருதுகள் வழங்கி கௌரவித்தோம்.நான் ஒன்பதாம் வகுப்பு படித்த வகுப்பறைக்குச் சென்று அப்போது அமரும் அதே பெஞ்சில் சற்று நேரம் அமர்ந்திருந்தேன்.அற்புதமாக தமிழ் வகுப்பெடுக்கும் ராஜப்பா சாரின் தமிழ் வகுப்பில் அமர்ந்திருப்பது போன்றதொரு பிரமை.நினைவென்னும் ஆழ்மன அடுக்கில் விழுந்து எங்கோ தூரமாய்ப் பயணித்துக் கொண்டேயிருந்தேன்.ராஜேஷ் தோள் தொட்டதும் தான் சுய நினைவுக்கு வந்தேன்.பிறகு நாங்கள் பல்வேறு குழுக்களாய்ப் பிரிந்து பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு 'சுயமுன்னேற்றம் மற்றும் எதிர்காலத்தில் தேர்ந்தெடுக்க வேண்டிய படிப்பு' பற்றி வகுப்பெடுத்தோம்.எத்தனையோ உலகப்பிரசித்தி பெற்ற பல்கலைக்கழகங்களில் பேராசிரியராகவும்,பன்னாட்டு நிறுவனங்களில் பெருநிறுவனப் பயிற்சியாளராகவும் உரையாற்றி இருந்தாலும் கூட நான் படித்த பள்ளியில்...அமர்ந்திருந்த அதே வகுப்பறையில் மாணவர்களிடம் உரையாற்றிய போது கிடைத்த நிறைவுக்கு ஈடில்லை.தஞ்சையில் பல தனியார் பள்ளிகள் வந்து விட்ட நிலையில் நாங்கள் படித்த போது இருந்த பொருளாதார நிலையில் பள்ளி இல்லை என்பதை உணர்ந்து நண்பர்கள் அனைவரும் எங்களால் இயன்ற அளவு பணம் சேர்த்து பள்ளிக்குக் கழிப்பறைகள் கட்டிக்கொடுக்க முடிவு செய்தோம்(தற்போது கட்டி முடிக்கப்பட்டு உபயோகப்படுத்தப்படுகிறது). பின்னர் நேரம் போவது தெரியாமல் அரட்டையடித்து விட்டுப் பிரிய மனமில்லாமல் விடைபெற்றோம்.மறுநாள் August 6 அன்று தஞ்சை சங்கம் ஹோட்டலுக்கு குறித்த நேரத்திற்குச் சற்று முன்னரே சென்று விட்டேன்.பாதி பேர் வந்து விட்டிருந்தனர்.வட்டமாக நாற்காலிகளைப் போட்டு அமர்ந்து கொண்டோம்.எல்லோரும் பேசிக் கொண்டிருக்கும் போதே ராஜசுந்தர்,ஸ்ரீதர்,கார்த்தி(மூவரும்),சுதா,கேகே,சூரி,உஷாநந்தினி,ஹசீம்,கோபால்,சங்கர் என ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கைத் துணையுடனும்,குழந்தைகளுடனும் வரத்துவங்க கச்சேரி களைகட்டியது.ஒவ்வொருவராக மைக் பிடித்து 30 வருட காலத்தில் என்ன செய்து கொண்டு இருந்தோம் என்று பேசியது அருமையான மலரும் நினைவுகள்.பின்னர் குழந்தைகள் பாட்டு, நடனம் என அசத்தினர்.இறுதியாக அட்டகாசமான விருந்துடன் அன்றைய தினமும் இனிதே நிறைவடைந்தது.சிறுவயதில் பள்ளிதோழர்களிடம் நாம் கொண்டுள்ள உரிமையும் அவர்கள் பால் வைக்கும் எதிர்பார்ப்பற்ற அன்பும் எத்தனை வருடங்கள் ஆனாலும் மாறாது என்பதை இந்த ரீயூனியன் புரியவைத்தது.யார் பெரியவர்? யார் சிறியவர்? வென்றவர் யார்? தோற்றவர் யார்? பணக்காரர் யார்? வசதி குறைந்தவர் யார்? என்ற எந்தப் பாகுபாடும் இல்லாமல் இருக்கும் இந்தக் கள்ளம் கபடம் இல்லா நட்பு என்னை நெகிழ வைத்தது.மாறிக்கொண்டே வரும் வாழ்க்கைச்சூழலில் நட்பின் வெளிப்பாடு எவ்வளவு அவசியம்...அது நம்மை எப்படிப் பல வழிகளில் ஆசுவாசப்படுத்துகிறது என்பதை இந்த 2 நாட்களும் எனக்கு உணர்த்தியது. பால்யத்தை வசந்தகாலமாக்கிய பள்ளியையும்,வகுப்பறைகளையும்,விளையாட்டு மைதானத்தையும் கண்டு களித்து தோழமைகளுடன் உரிமையுடன் உரையாடிய கணங்கள் வாழ்வின் உன்னதப் பக்கங்களில் நீங்காத நினைவுகளுடன் என்றென்றும் நிலைபெற்றிருக்கும்.
புதுமைப்பித்தனுக்குப் பின் வலுவாக எழுந்த நம் கிராமியக்கதை மரபின் இரு பெரும்போக்குகளை தொடங்கி வைத்த முன்னோடிகள் என கி. ராஜநாராயணனையும், கு.அழகிரிசாமியையும் சொல்லலாம். இடைசெவல் கிராமம் தமிழ் இலக்கியத்துக்கு வழங்கிய இருபெரும் ஆளுமைகள். ஒரே ஊரில் ஒரே தெருவில் அடுத்தடுத்த வீடுகளில் வாழ்ந்து சாகித்ய அகாடமி விருது வென்ற நண்பர்கள் இவர்கள் இருவராகத்தான் இருப்பார்கள். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒரு தெருவின் புழுதியில் ஒன்றாய்க் கட்டிப் புரண்டு விளையாடியவர்கள். அவர்களுக்குள்ளிருந்த நட்பு மிகவும் அலாதியானது. கு.அழகிரிசாமி உயிரோடிருந்த போது அவர் தனக்கெழுதிய கடிதங்களை எல்லாம் தொகுத்து உயிர்மை பதிப்பகத்தின் மூலம் நூலாக வெளியிட்டிருக்கிறார் கி.ராஜநாராயணன். "75 ஆண்டுகளுக்கு முன்னால் எழுதப்பட்ட இக்கடிதங்களை இப்போது வாசித்துப் பார்க்கும் போது... என்னவெல்லாமோ எண்ணங்கள் மனசில் தோன்றுகிறது. இக்கடிதங்கள் வெளி உலகத்துக்கு வேடிக்கையாகத்தான் தோன்றும். எங்கள் இருவர் பெயர்களையும் நீக்கி விட்டு இதில் சில பகுதிகளை யாருக்கும் படிக்கக் கொடுத்தால் காதல் கடிதங்களா என்று கேட்பார்கள். தூங்கி எழுந்ததும் குளித்து விட்டு பூஜைக்கு உட்காருவது போல கடிதம் எழுத உட்காரும் பழக்கம் எங்களிடமிருந்தது. அந்தப் பிராயத்தில் குறைந்தது நாள் ஒன்றுக்கு ஒரு கடிதமாவது எழுதுவது என்றிருந்தது. இத்தனை வருடங்களாக இக்கடிதங்களை எப்படிப் பாதுகாத்து வைத்திருந்தேன் என்பதே அதிசயமானது தான். இவைகளைப் படிக்கும் போது மனசுக்கு ஒரு 'இது' வாக இருக்கும். கடிதம் வந்தால் அந்த நண்பனே வந்து விட்ட சந்தோஷம் இருக்கும். திரும்பத் திரும்ப படிக்கத் தோன்றும். என் வாழ்கையில் நிகழ்ந்த அற்புதங்கள் என்று இக்கடிதங்களைக் குறிப்பிட வேண்டும் போல் தோன்றுகிறது" என்கிறார் கி.ரா.
கு. அழகிரிசாமி தன் கடிதங்களில்...
"உன் கடிதம் காணாததால் நான் இந்தக் கடிதம் எழுதுவதாக நீ நினைக்கலாம். இல்லை. நீ இதற்குள் பத்துக் கடிதங்கள் எழுதியிருந்தாலும் இந்தக் கடிதம் உனக்கு எழுதாமல் தீராது. ஏதோ ஒரு அன்பின் சக்தி உள்ளே இருந்து தூண்டுகிறது"
...
"உண்ணும் போதும் உறங்கும் போதும் உன் ஞாபகமாகவே இருக்கிறது. உன்னோடு பேசிக் கொண்டிருப்பதாக எத்தனை தடவைகள் கனவு கண்டு விட்டேன் தெரியுமா? நான் சாப்பிடும் போது என்னோடு உட்கார்ந்து ஒரே பாத்திரத்தில் சாப்பிடுகிறாய். நான் உறங்கும் போது என்னோடு ஒரே தலையணையில் தலை வைத்து உறங்குகிறாய். நான் கதை எழுதும் போது என் பேனாவை உன் கையால் தான் பிடித்து எழுதுகிறாய். இந்தப் பிரமை தட்டும் நினைவிலிருந்து உள்ளத்தைப் பிரிக்கவே முடியவில்லை. ஆபீஸ் முடிந்ததும் வேறெங்கும் போகாமல் ஒரு தனியிடத்துக்கு வந்து விடுவேன். ராஜநாராயணனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி சொல்லி முடியாது. ஒரு சங்கீதம் கேட்கிற மாதிரி இருக்கிறது"
...
"ஒரு மகிழ்ச்சிவெறி பொங்கும் சந்திப்பு ஒன்று பின்னால் இருக்கிறது என்ற நினைப்புக்கு இந்தப் பிரிவு தான் எவ்வளவு துணை செய்கிறது"
"உன் கடிதம் காணாததால் நான் இந்தக் கடிதம் எழுதுவதாக நீ நினைக்கலாம். இல்லை. நீ இதற்குள் பத்துக் கடிதங்கள் எழுதியிருந்தாலும் இந்தக் கடிதம் உனக்கு எழுதாமல் தீராது. ஏதோ ஒரு அன்பின் சக்தி உள்ளே இருந்து தூண்டுகிறது"
...
"உண்ணும் போதும் உறங்கும் போதும் உன் ஞாபகமாகவே இருக்கிறது. உன்னோடு பேசிக் கொண்டிருப்பதாக எத்தனை தடவைகள் கனவு கண்டு விட்டேன் தெரியுமா? நான் சாப்பிடும் போது என்னோடு உட்கார்ந்து ஒரே பாத்திரத்தில் சாப்பிடுகிறாய். நான் உறங்கும் போது என்னோடு ஒரே தலையணையில் தலை வைத்து உறங்குகிறாய். நான் கதை எழுதும் போது என் பேனாவை உன் கையால் தான் பிடித்து எழுதுகிறாய். இந்தப் பிரமை தட்டும் நினைவிலிருந்து உள்ளத்தைப் பிரிக்கவே முடியவில்லை. ஆபீஸ் முடிந்ததும் வேறெங்கும் போகாமல் ஒரு தனியிடத்துக்கு வந்து விடுவேன். ராஜநாராயணனைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சி சொல்லி முடியாது. ஒரு சங்கீதம் கேட்கிற மாதிரி இருக்கிறது"
...
"ஒரு மகிழ்ச்சிவெறி பொங்கும் சந்திப்பு ஒன்று பின்னால் இருக்கிறது என்ற நினைப்புக்கு இந்தப் பிரிவு தான் எவ்வளவு துணை செய்கிறது"
...
கு. அழகிரிசாமி 1970-ம் ஆண்டு இறந்து விட அரை நூற்றாண்டு காலமாக நட்பின் நினைவுகளோடு வாழ்ந்து மறைந்த கி.ரா...தனது சுயசரிதையில்,'எனது மெய்யான நண்பர்கள் மட்டும் எனக்கு வாய்த்திருக்காவிட்டால் இந்த உலகில் வசிப்பதே வீண் என்று எப்பவோ தோன்றியிருக்கும்' என்று குறிப்பிட்டிருக்கிறார்.

நட்பின் வெற்றி ரகசியம் என்னவெனில்...நண்பர்கள் கண்ணோட்டத்தைப் புரிந்து கொள்வது. உங்கள் கோணத்திலிருந்து மட்டுமல்லாமல் அவர்கள் கோணத்திலிருந்தும் விஷயங்களைப் புரிந்து கொள்வதாகும். தன் நண்பர்கள் பற்றி எப்போதும் குறை கூறிய சிறுவனிடம் அப்பா சொன்னார், "இந்த மாமரத்தை உன் நண்பனாக்கிக் கொள். ஒரு வருடத்திற்கு மரத்துடன் பழகு". ஒரு வருடம் சென்றது. மரத்தின் வெவ்வேறு பருவங்கள் பற்றி மகனிடம் கேட்டார். இலையுதிர் காலத்தில் உதிர்கிறது. வசந்த காலத்தில் அதன் தோற்றமே மாறுகிறது. பனியில் வாடுகிறது என்றெல்லாம் சொன்னான். அப்பா சொன்னார், மரங்கள் போல் தான் நண்பர்களும். ஒவ்வொரு நேரத்திலும் இயல்புகள் மாறும். மாற்றங்களோடு நண்பர்களை ஏற்றுக்கொண்டு பழகு, பின்பு அவர்களிடம் எந்தக் குறையும் காணமாட்டாய் என்று. மரங்களையும் நண்பர்களையும் புதிதாய்ப் பார்க்கத் தொடங்கினான் சிறுவன். ஆக நண்பர்களை அவரவர் இயல்புகளோடு ஏற்கப் பழகினால் நம் நண்பர்கள் கூட்டம் பெரிதாகிக் கொண்டே இருக்கும். எப்படிப்பட்ட நண்பர் நமக்கு அமைய வேண்டும் என்று நாம் விரும்புகின்றோமோ அப்படிப்பட்ட நண்பராக முதலில் நாம் இருந்து காட்ட வேண்டும்.
அது ஒரு திருமண வரவேற்பு. மணமகன் ராஜேஷ் சில வருடங்களுக்கு முன் என்னுடன் மேலாண்மைத் துறையில் பணிபுரிந்தவர். இப்பொழுது நாங்கள் இருவருமே வெவ்வேறு நிறுவனங்களில் பணி செய்கிறோம். இந்த இடைக்காலத்தில் எங்களிடையே தொடர்பில்லை. திடீரென்று ஒரு நாள் அலைபேசியில் அழைத்து "எனக்கு திருமணம் உங்களை நேரில் வந்து அழைக்க வேண்டும்" என்று சொல்லி வரவேண்டிய நேரத்தினை முடிவு செய்து கொண்டார். பின்பு சொன்ன நாள், நேரத்திற்கு அவருடைய பெற்றோருடன் வந்தார். அழைப்பிதழை பூ, பழங்களுடன் கொடுத்து விட்டு, "அவசியம் வரவேண்டும். நிச்சயம் எதிர்பார்ப்பேன்" என்று அன்புடன் கட்டளையாகவே சொல்லிவிட்டுப் போனார். திருமணம் மிகவும் அதிகாலையில் இருந்ததால் மாலையில் வரவேற்புக்குச் சென்றேன். உள்ளே சாதாரணமாக போய் விட முடியவில்லை. கூட்டநெரிசல் எனக்கு ஆச்சரியத்தை கொடுத்தது. மெதுவாக உள்ளே போனதும் வியப்பும், பிரமிப்பும் மேலும் அதிகமானது. ஏகப்பட்ட பேர் அங்கும் இங்குமாய் நடமாடிக் கொண்டிருந்தார்கள். ராஜேஷின் கல்யாண ரிசப்ஷனுக்கு இவ்வளவு பேர் வந்திருக்கிறார்களா? வரிசையில் நிற்பவர்களைக் கவனித்தேன். தங்கள் தருணங்களுக்காகக் காத்திருந்து, வந்ததும் மேடை ஏறி, கைகுலுக்கி, வாழ்த்தி, பரிசு கொடுத்து, புகைப்படம் எடுப்பதற்காக சில வினாடிகள் அசையாமல் நின்று விட்டு இறங்கினார்கள். வரிசை நகர்ந்து கொண்டேயிருந்தது. நானும் நெருங்கி விட்டேன். மெல்ல பின்பக்கம் திரும்பிப் பார்த்தேன். அட! அதற்குள் வரிசையின் வால் வளர்ந்து விட்டதே! எங்களுக்குப் பின் இன்னும் நூறு பேர்! என்ன இது மக்கள் வந்து கொண்டே இருக்கிறார்களே! மேடை ஏறி நெருங்கி வந்த ஒவ்வொருவரையும் முன் சென்று மகிழ்ச்சி பொங்க வரவேற்றார் ராஜேஷ். தன் மனைவியிடம் ஏதேதோ சொல்லி அறிமுகப்படுத்தினார். சிலர் அவரை நெருங்கி தோளோடு தோள் சேர்த்து இறுக அணைத்துக் கொண்டார்கள். வெடிச்சிரிப்புகள், கேலிகள் என்று மேடையே அவ்வப்போது மகிழ்ச்சியில் குலுங்கிக் கொண்டிருந்தது. எப்படி இவ்வளவு நபர்களை ஒருவரால் தெரிந்து வைத்திருக்க முடியும்? எப்படி இவ்வளவு எண்ணிக்கையிலான மனிதர்களுடன் பழக்கமும் நெருக்கமும் சாத்தியம்? அதுவும் இவ்வளவு சின்ன வயதில்? ஆத்மார்த்தமான அன்பு, ப்ரியம், மரியாதை, முக்கியத்துவம் ஆகிய நற்குணங்களினால் தனது நட்பு வட்டத்தை விஸ்தாரப்படுத்த முடிந்திருக்கிறது அவருக்கு. அறிமுகமாகும் எவருடனும் நல்ல விதத்தில் பழகி பின்பு நட்பாக்கிக் கொண்டு விட முடிகிறது ராஜேஷ் போன்ற நட்பாளர்களால். இப்படி பலருடனும் சிறந்த நட்பு உறவுமுறை உண்டாக்கி வாழ்வில் உன்னத நிலையை அடைந்தவர்கள் அநேகம்.
என் வாழ்வில் நீங்கா இடம் பிடித்த சம்பவங்களில் இதுவும் ஒன்று. நானும் என் ஆருயிர் நண்பன் கரிகாலனும் அப்போது ஒன்பதாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தோம். தீவிர கமல்ஹாசன் ரசிகர்களான நாங்கள் ஒரு நாள் மதிய வகுப்பை 'கட்' அடித்து விட்டு தஞ்சாவூர் பர்வீன் தியேட்டரில் "புன்னகை மன்னன்" திரைப்படத்திற்குச் சென்று விட்டோம். அம்மாவிடம் மாட்டிக் கொள்வோமோ என்கிற ஒரு பயம் இருந்து கொண்டேயிருந்தது.பயந்தது போலவே அம்மாவிற்கு எப்படியோ இந்த விஷயம் தெரிந்து போய் விட்டது.படம் பார்த்து முடித்து விட்டு கரிகாலனுடன் என் வீட்டிற்குச் சென்றேன்.வீட்டிற்குள் நாங்கள் இருவரும் நுழைந்தவுடனே என்னைத் தவிர்த்து விட்டு கரிகாலனிடம் அம்மா கேட்டார்கள்... "இருவரும் எங்கே போனீர்கள்? என்ன செய்து கொண்டிருந்தீர்கள்?" என்று. கரிகாலனுக்கு உள்ளூர பயமிருந்தாலும் ஒருவாறு சமாளித்துக்கொண்டு நாங்கள் இருவரும் அவன் வீட்டில் அறிவியல் பாடம் படித்துக் கொண்டிருந்ததாகக் கூறினான். பின்னர் அவன் விடைபெற்றுச் சென்றவுடன், எனக்கு எல்லாம் தெரியும். உண்மையைச் சொல் என்று கேட்டார் அம்மா. நான் உண்மையை ஒப்புக்கொண்டேன். மேலும் பொய் சொன்னதற்காக கரிகாலனின் நட்பையே தவிர்க்க வேண்டுமென்று அம்மா கூறி விடுவாரோ எனக் கலக்கமடைந்தேன். ஆனால் எனக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில், "கரிகாலன் செய்தது தவறு தான். அவன் பொய் சொல்லியிருக்கக் கூடாது. இருப்பினும் தன் நண்பனைக் காட்டிக் கொடுக்காமல் பொய் சொன்னானே அவன் தான் உன் உண்மையான நண்பன்" எனக் கூறினார். இதனைப் பிறகு கரிகாலனிடம் சொன்ன போது பெருமகிழ்ச்சி அடைந்தான். இன்று என் நண்பன் கரிகாலன் இயற்கை எய்தி ஆண்டுகள் பல ஆகி விட்ட போதிலும்... அவன் உயிரோடிருக்கும் வரை என் ஆகச் சிறந்த நண்பனாக விளங்கினான்.

கோப்பெருஞ்சோழன் - பிசிராந்தையார் நட்பு வரலாற்றுப் பிரசித்தி பெற்றது. கோப்பெருஞ்சோழன் சோழ நாட்டின் கவிப்புலமை வாய்ந்த மாமன்னன். ஆனால் அவர் பாண்டியநாட்டுப் புலவர். பிசிராந்தையார் மீது மானசீகமான நட்பு கொண்டார். அதே போன்று பிசிராந்தையாரும் சோழப் பேரரசர் கோப்பெருஞ்சோழன் மீது நட்பு கொண்டார். இருநாட்டுக்குமிடையே தூரம் அதிகமிருந்தும் அவர்களுக்குள் நட்பு மனம் இணைந்திருந்தது. காலச்சூழ்நிலையால் கோப்பெருஞ்சோழன் வடக்கிருந்து உயிர் துறக்கத் துணிந்தார். அப்போது நகருக்கு வெளியே அவருக்கென்று ஓர் இருக்கையிடப்பட்டது. தனது இருக்கைக்கு அருகில் மற்றொரு இருக்கையை தனது நண்பர் பிசிராந்தையாருக்காக இடச்செய்தார்.மன்னா! பிசிராந்தையார் உனது பெயரையும் புகழையும் அறிந்தவரேயன்றி இதுவரை உங்களை நேரில் கண்டவரில்லை, பழகியவருமில்லை. மேலும் அவர் தங்கள் நிலையறிந்து பாண்டியநாட்டிலிருந்து இங்கு வருவது சாத்தியமாகாது என்றார் அமைச்சர். அதற்கு மன்னர்பிரான், "எனது நண்பர் பிசிராந்தையார் எவ்வளவு தூரத்திலிருந்தாலும் நான் ஆட்சி புரிந்த போது வராவிட்டாலும் நான் உயிர்துறக்கும் இந்நேரத்திலாவது உறுதியாக வருவார்" என்றார். தனது ஆருயிர் நண்பர் கோப்பெருஞ்சோழன் வடக்கு நோக்கியிருக்கிறார் என்ற செய்தி கேட்டதும் தனது சேயைக் காணவரும் தாயைப்போல் ஓடோடி வந்தார் பிசிராந்தையார். ஆனால் அவர் வருவதற்குள் கோப்பெருஞ்சோழன் உயிர் துறந்திருந்தார். அதனைக் கண்டு வருந்தி கண்ணீர் மல்கினார். தனது நண்பனை மண்ணுலகத்தில் தான் காணமுடியவில்லை. விண்ணுலகிலாவது காணலாம் என்றெண்ணி, தானும் மன்னர் தனக்கென இட்டிருந்த இருக்கையில் அமர்ந்து... வடக்கிருந்து உயிர் நீத்தார் பிசிராந்தையார்.ஒருவரையொருவர் நேரில் சந்தி்த்துப் பழகிக் கொள்வது மட்டும் நட்பல்ல, உள்ளத்தால் உறவாடிக் கொள்வதும் நட்பு தான் என்பதை உலகத்துக்கு அறிவித்தது அவர்களின் நட்பு.
நண்பர்களில்லா வாழ்க்கை பாலைவனத்தில் நடக்கின்ற ஒற்றைப் பயணம். அதனால் தான் ஹெலன் கெல்லர் என்னும் அமெரிக்க நாட்டு எழுத்தாளர், "தனியாக வெளிச்சத்தில் நடந்து செல்வதை விட இருளில் நண்பனோடு நடப்பதே சிறந்தது" என்றார்.தாய், தந்தை, உடன்பிறந்தோர், மனைவி, மக்கள் என்ற குடும்ப உறவுகள் தாண்டிய ஓர் உன்னத உறவு நட்பு.உண்மையான நட்பு அன்பின் அற்புதம், பழகுவதின் உன்னதம்; வாழ்வில் கிடைத்தற்கரிய பரிசு!

அருமை 🤝👌
ReplyDeleteமிகுந்த நன்றி மாமா🙏
Deleteஇனிய நட்பு தின வாழ்த்துக்கள் என் அன்பான Dr.LK
ReplyDeleteநன்றி முனைவர் பத்மநாபன்.நட்பு தின வாழ்த்துகள்!
ReplyDeleteAmazing and awesome write up on friendship. Your values and bonding towards friendship is worth admiring and high appreciable. Only persons who have tasted all dimensions of friendship can write at such level. Proud and lucky to be your friend. May God bless us with more meetings in the years to come. Congrats.
ReplyDeleteDr T. Sarathy.
Fantastic comment Dr.Sarathy.Thanks a million.🙏
DeleteSuper ��✒��
ReplyDeleteThanks dear Senthan🙏
DeleteVery Nice Your Reunion
ReplyDeleteThank you so much🙏
DeleteSir very nice. My school days with my friends and Teachers are come into picture. Thank you for sharing information regarding friendship.
ReplyDeleteHappy to know that you could recall your school days Vani.Value your friendship a lot.
DeleteGood one....The snap with the bikes is from our Ooty trip...right?
ReplyDeleteYes Anand☺️...that is our memorable Ooty trip🥰
ReplyDeleteஉயிரோட்டமான எழுத்து கார்த்தி.
ReplyDeleteவாழ்க.
மிகுந்த நன்றி விஜய்!
Deleteநல்ல ஒரு பதிவு கார்த்தி சார். சின்ன வயசில இருந்து நினைவுபடுத்தி எழுதி இருக்கீங்க. அருமை. கட் அடிக்கிற பழக்கம் எல்லோர் கிட்டயும் இருந்திருக்கு.
ReplyDeleteதங்களின் விமர்சனம் பெருமகிழ்ச்சியை அளித்தது மோசஸ் சார்.என் நெஞ்சார்ந்த நன்றி!🙏
Delete