Saturday, 5 May 2018

கற்க கசடற!


“கல்வி என்பது வெள்ளத்தால் போகாது;வெந்தனலால் வேகாது;வேந்தராலும் கொள்ள முடியாது;கொடுத்தாலும் குறையாது;கள்ளர்களால் திருட முடியாது;காவலுக்கும் மிக எளிது” என்கிறது கொன்றை வேந்தன்.
“பிச்சை புகினும் கற்கை நன்றே” என்கிறது நாலடியார்.
-இப்படி பன்னெடுங்காலத்திற்கு முன்னரே கல்வியின் அவசியத்தை உணர்ந்து அதை எப்படியாவது பெற வேண்டும் என வலியுறுத்தியது தமிழ்ச்சமூகம்.இவ்வாறு காலங்காலமாக கல்வியின் பெருமையைக் கூறி வந்ததின் பயன் இன்றைக்குப் படித்தவர்களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்துள்ளது.பாடம் பயில்வதற்கு மட்டும் தான் கல்வியா என்றால் இல்லை என்பதே என் பதில்.கல்வி என்பது மனிதனை பண்படுத்தும் ஒரு வழிமுறை.அறிதல்,புரிதல்,தெளிதல்,ஆராய்தல்,சிந்தித்தல்,திட்டமிடல்,செயல்படுத்துதல்,வெற்றி பெறுதல் எனப் படிப்படியாக வெற்றிக்கான படிநிலைகளைக் கற்றுத்தரும் கல்விமுறையே சிறந்த முறையாகும்.ஆனால் மதிப்பெண்கள் பெறுவதொன்றே வாழ்வின் ஒரே இலட்சியம் என்பது போல் இன்றைய கல்விக்கூடங்கள் இயங்கி வருவது மிகவும் வேதனையளிக்கிறது.இது குறித்த தீவிர சிந்தனைகள் தேவை என்பதே என் பார்வை.தனிமனித ஒழுக்கம்,கலாச்சாரம்,நம் பண்பாட்டு வேரினைப் பற்றிய புரிதல் ஆகியவற்றை விட்டு விலகி நிற்கிறது இன்றைய கல்வி.நமது தொழில்நுட்ப வளர்ச்சி குறுகிய மனப்பான்மையை,எதிலும் ஓர் அவசரத்தன்மையை,அசுரத்தனமான வளர்ச்சியை,அதீதமான நம்பிக்கையை விதைத்திருக்கிறது.இதனால் மனிதநேயம் குறைந்து சுயநலமே மேலோங்கியிருக்கிறது.பெரியோரை மதியாத-வேர்களை வெறுக்கும் விழுதுகளாய் வாழும் ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது.உலகின் அனைத்து விஷயங்களையும் பொருளாதாரப் பார்வை கொண்டே பார்க்கப் பழக்கியிருப்பது தான் நமது கல்வி செய்துள்ள ஆகப்பெரிய சாதனை.வாழ்வியல் கூறுகள் சரியாகப் போதிக்கப்படுவதில்லை.தற்போதைய மாணவர்கள் அறிவுத்திறன் மிக்கவர்களாக விளங்குகின்றனர் என்பதில் எனக்கு இரண்டாம் கருத்து கிடையாது.அதே சமயம் அவர்கள் பொறுப்புணர்வு மிகுந்தவர்களாக,சகிப்புத்தன்மை உடையவர்களாக, குடிப்பழக்கம் இல்லாதவர்களாக,புத்தக வாசிப்பின் இன்றியமையாமையை உணர்ந்தவர்களாக,சமூக சிந்தனை மிக்கவர்களாக உருவாக்கப்படுவதிலே தான் கல்வியின் உண்மையான வெற்றி இருக்கிறது.படிப்புடன் சேர்த்து வாழ்க்கை ஒழுக்கம்,தாய்மொழிப்பற்று,தேசப்பற்று,அன்பு,பாசம் பற்றி மாணவர்களுக்குக் கற்றுத்தரும் கட்டாயச் சூழ்நிலையில் நாம் இருக்கிறோம்.

“எழுத்தறிவித்தோன் இறைவனாவான்” என்பது முதுமொழி.ஆசிரியர்களின் கௌரவம்,மேன்மை,உயர்வு,மாண்பு அத்தகையது.மாணவர்களைத் தங்கள் பிள்ளைகளைப் போல் நேசித்து,ஒவ்வொரு மாணவனையும் அவனது திறமைக்கேற்ப பட்டை தீட்டப்பட்ட வைரங்களாக ஜொலிக்க வைக்கின்றனர் ஆசிரியர்கள்.”எங்கே நடப்படுகிறாயோஅங்கே மலராகு” என்ற பொன்மொழிக்கு எடுத்துக்காட்டாய் இருப்பவர்கள் ஆசிரியர்கள் தான்.உலகில் நிகழும்,நிகழ்த்தப்படும் மாற்றங்கள்,வியப்புகள் அத்தனையும் நிகழ்த்தப்படுவது எங்கோ ஒரு மூலையில் தன்னலம் கருதாமல் ஓர் ஆசானால் உருவாக்கிய அந்த மாணவச் சமுதாயத்தினால் தான்.ஒரு சமூகம் உன்னத நிலை அடைந்து இருந்தால் அதன் பின்னால் ஆசிரியர் சமூகம் இருப்பதாக அர்த்தம்.ஒரு சமூகம் தாழ்ந்து போனால் ஆசிரியர் சமூகம் தனக்கான பணியை சரிவர செய்திடவில்லை என அர்த்தம்.வேறு எந்தத் துறையை விடவும் அதிக பொறுப்புகளும்,அதிக முக்கியத்துவமும், நிறைந்தது அவர்கள் பயணம்.மண்கலவையாய் தன்னிடம் வந்து சேரும் மாணவனை தேவையான வடிவில் வார்ப்பது ஆசிரியரே.பாடம் சொல்லித்தர மட்டும் தான் ஆசிரியரா என்றால் இல்லை என்பதே என் பதில்.”மரம் ஏறக்கூடச் சொல்லித்தராதவர் என்ன ஆசிரியர்?” என்று எங்கோ படித்தது ஞாபகத்துக்கு வருகிறது.துபாய் மணிப்பால் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் போது என் சக பேராசிரியர் திரு.சதீஷ்குமார் தனது முதல் வகுப்பை பல்கலைக்கழக உணவகத்தில் துவங்கினார்.பலரது புருவங்கள் மேலுயர்ந்தன.இஃதென்னவென வியந்தனர்.ஆனால் அவரது அந்த அணுகுமுறை அநேகரால் பாராட்டப்பட்டது.ஒரே மாதிரி மாணவர்களை அணுகாமல் இது போல் வித்தியாசமாகவும்,புதுமையாகவும்,சுவாரசியமாகவும் சொல்லித்தருவதன் மூலமே மாணவர்களை கவனிக்க வைக்க முடியும் என்பது தெளிவாகியது.என் பள்ளி மற்றும் கல்லூரிப் பருவத்தில் பல ஆசிரியர்கள் என்னைக் கவர்ந்தாலும் சில ஆசிரியர்களை நான் வெறுக்கும்படியான சூழ்நிலையே அமைந்தது.பள்ளிப்பருவத்து ஆசிரியர்கள் சிலர் திட்டுவதும்,அடிப்பதுமாகவே இருந்தனர்.அதே போல் சில கல்லூரிப் பருவத்து ஆசிரியர்கள் போதுமான திறமை இல்லாதவர்களாகவும்,Internal mark குறைத்து விடுவேன் என்று பயமுறுத்துபவர்களாகவும் இருந்தனர்.அப்போதே நான் முடிவு செய்தேன் – ஒருவேளை நாம் ஆசிரியர் தொழிலுக்கு வர நேரிட்டால் இவர்களைப் போலெல்லாம் இருக்கக்கூடாதென்று.எவ்வாறெல்லாம் ஒரு தொழிலில் இருக்கக்கூடாதெனத் தெரிந்து விட்டாலே பாதி வெற்றி உறுதி தானே?ஒரு பேராசிரியர் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக என் தோழர் முனைவர் சாரதி அவர்களைச் சொல்வேன்.முதன்முதலாக ஈரோடு SSM கல்லூரியில் பணிபுரியும் போது அறிமுகமானவர்.அவர் வகுப்பெடுக்கும் முறையைக் கூர்ந்து கவனிப்பேன்.மேடையில் நிற்பது,மாணவர்கள் அனைவரையும் கவனிப்பது,பேச்சின் வேகம்,குரல் வளம் அனைத்தும் மிக நேர்த்தியாக இருக்கும்.மேலும் Business India, Business Today போன்ற மேலாண்மைக்குத் துறைக்குத் தேவையான இதழ்களைப் படித்துத் தன்னை மேம்படுத்திக் கொண்டே இருப்பார்.My Inspiration.தற்போது பெரியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.இவ்வாறு ஒர் ஆசிரியருக்குரிய குறை,நிறைகளைத் தெரிந்து கொண்டதாலேயே என்னால் சிறப்பாகச் செயல்பட முடிகிறது.

இன்றைய கல்வி முறையும்,குடும்பச் சூழ்நிலையும்,வாழ்க்கைப் பாதையும் மாணவர்களைத் தீவிர மன உளைச்சலுக்கு உள்ளாக்குகிறது.மாணவனைத் தனியாக அழைத்துச் சென்று தான் counseling கொடுக்க வேண்டும்.மிரட்டிக் கண்டிப்பதையும்,மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பேசுவதையும் மாணவர்கள் துளியும் விரும்புவதில்லை.குறித்த நேரத்தில் பாடத்தை முடிப்பது மட்டுமே ஆசிரியருடைய வேலையில்லை.மாணவர்களுக்குப் புரியும்படி கற்பிக்கும் போது தான் மதிப்பும்,மரியாதையும் ஏற்படும்.
போக்கிரித்தனமாகவும்-கட்டுக்கடங்காமலும்-மாணவிகளை ஈவ் டீசிங் செய்வதுமான காரணங்களத் தவிர வேறெந்தக் காரணங்களுக்காகவும் நான் மாணவர்களைக் கோபிப்பதில்லை.கல்லூரி நாட்களை விட்டால் வேறு எப்போது இவர்கள் இவ்வளவு உற்சாகமாகவும்,மகிழ்ச்சியாகவும் இருப்பார்கள் என நான் எண்ணுவேன்.”சார்,நாங்கள் என்ன செய்தாலும் உங்களுக்குக் கோபமே வருவதில்லையே,ஏன்?” என்று என் மாணவர்கள் கேட்பதுண்டு.”ஏனெனில் உங்கள் வயதில் உங்களை விட அதிகம் குறும்புத்தனம் செய்தவன்” என்று நான் கூறுவதைக் கேட்டுச் சிரிப்பார்கள்.
நான் முகநூலில் என் மாணவர்களுடன் தொடர்பில் இருப்பவன்.இது என் சக ஆசிரியர்கள் சிலருக்குப் பிடிக்கவில்லை.”மாணவர்களிடம் இவ்வளவு நெருக்கம் தேவையா?” என என் காதுபடவே முணுமுணுத்தனர்.என் செயல்பாட்டில் தவறேதும் எனக்குத் தோன்றவில்லை.எனவே அவர்களின் விமர்சனத்தை நான் பொருட்படுத்தவில்லை.ஒரு முறை மாதாந்திர சந்திப்பில் மேலாண்மைத்துறைத் தலைவர் – பேராசிரியரிகளிடம் – “யாரெல்லாம் மாணவர்களுடன் சமூக ஊடகத்தில் தொடர்பில் உள்ளீர்கள்?” எனக் கேட்டார்.உடனே சில பேராசிரியர்கள் என் பெயரைக் கூறியதுடன்,என்ன மாதிரியான பின் விளைவுகளை நான் சந்திக்கப் போகிறேன் என்று ஆர்வத்துடன்(?) கவனிக்கவும் துவங்கி விட்டனர்.எதிர்பார்ப்பிற்கு மாறாக...துறைத்துலைவர் என்னை மனதாரப் பாராட்டினார்.”எந்தப் பேராசிரியர் மாணவர்களுடன் சமூக ஊடகத்தில் தொடர்பில் இருக்கின்றாரோ அவர்களால் தான் மாணவர்களைப் புரிந்து கொள்ளவும்,அவர்களுடைய பிரச்னைகளுக்குத் தீர்வளிக்கவும் முடியும்” என்று கூறினார்.நான் சரியான பாதையில் தான் செல்கிறேன் என்று உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டேன்.மேலும் பேசிய துறைத்தலைவர்,”வகுப்புக்குச் சென்று பாடமெடுக்காதீர்கள்” என்றார்.அதிர்ச்சியாக இருக்கிறதல்லவா? ”விஞ்ஞான வளர்ச்சியின் காரணமாக இன்றையத் தலைமுறை மாணவர்களுக்கு அனைத்துத் தகவல்களும் விரல்நுனியில் இருக்கிறது.ஆகவே நீங்கள் ஒரு பேராசிரியராக இருப்பதை விட ஒரு செயலாக்குநராக(facilitator) விளங்க வேண்டும்.வகுப்பறையில் உங்கள் குரலை விட மாணவர்களின் குரலே அதிகம் கேட்குமாயின் நீங்கள் திறம்பட வகுப்பைக் கொண்டு செல்கிறீர்கள் என்று அர்த்தம்” என இந்த நவீன யுகத்தில் மாணவர்களுக்குக் கற்பிக்க வேண்டியதன் சூட்சுமத்தை விளக்கினார்.
பிற கல்லூரிப் பேராசிரியர்களை நான் சந்திக்கும் போது,எங்கு பணிபுரிகிறீர்கள்? என்ற கேள்வியுடன்,Is it physical or online?(வகுப்பிலா?இணையத்திலா?) என்ற கேள்வியையும் சேர்த்தே கேட்கின்றனர்.ஆக,ஒரு பேராசிரியர் எந்த அளவுக்குத் தன்னை மேம்படுத்திக் கொள்வது அவசியம் என்பது தெரிந்தது.

பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அறிவுரை கூறத் தேவையில்லை.எப்படி வாழ வேண்டும் என்பதை வாழ்ந்து காண்பித்தாலே போதும்.ஆனால் அவர்களோ தங்கள் சந்தோஷங்களை முற்றிலுமாகத் துடைத்தழித்துக் கொண்டு தங்கள் இளமைக்காலம் முழுவதையும் சம்பாதித்தல்-சேமித்தல் என்ற இரண்டு வார்த்தைகளுக்குள் அடக்கி விடுகின்றனர்.கணக்குப் பிள்ளைகளைப் போல எப்போதும் பணம் பற்றியும்,வரவு-செலவு பற்றியுமே பெற்றோர் பேசுவதால் இது தான் வாழ்க்கை எனக் குழந்தைகளும் எண்ணத் துவங்குகின்றனர்.தங்கள் பிள்ளைகளுக்காக உயிரை உருக்கிப் பணம் சேர்க்கிறார்கள் – ஏதோ எதிர்காலத்தில் அவர்கள் கையாலாகாதவர்களாக ஆகி விடுவார்கள் என்பது போல.எந்த வெளிநாட்டவரும் படிப்பை முடித்துப் பிள்ளைகள் வளர்ந்து விட்ட பின்னரும் சொத்து சேர்த்துத் தங்களை அழித்துக் கொள்வதில்லை.உலகப்புகழ் பெற்ற நடிகரான ஜாக்கிசான் தன் மரணத்திற்குப் பின் தன்னுடைய பெருமதிப்புள்ள சொத்துக்களை அறப்பணிகளுக்குக் கொடுக்கப் போவதாக அறிவித்தார்.”உஙகள் வாரிசுக்குக் கொடுக்கவில்லையா?” என நிருபர்கள் கேள்வி கேட்டனர்.அதற்கு அவர்,”என் மகன் திறமையானவராக இருந்தால் அவருக்குத் தேவையான பணத்தை அவரே சம்பாதிப்பார்.திறமையற்றவர் எனில்,நான் சம்பாதித்ததை அழிக்கவே செய்வார்” என்றார்.எத்தகைய புரிதல்!
பெரும்பாலான பெற்றோருக்கு அன்பு செலுத்துதலுக்கும், செல்லங் கொடுத்தலுக்கும் வித்தியாசம் தெரிவதில்லை.அரவணைப்பு, கட்டியணைத்தல், தொடர்பில் இருத்தல்,தன் வேலையைத் தானே செய்ய ஊக்கப்படுத்துதல்,உணர்வுகளை மதித்தல் இவையெல்லாம் அன்பு செலுத்துதலில் அடக்கம்.செல்லங்கொடுத்தல் என்பது குழந்தையால் செய்ய முடிகிற விஷயங்களையும் பெற்றோரே செய்வது,புகழ்ந்து கொண்டேயிருப்பது,கேட்டது அனைத்தையும் தருவது,அடம்பிடித்தலை ரசிப்பது மற்றும் ஒழுக்கமீறலை அனுமதிப்பது.பிள்ளை வளர்ப்பில் முக்கிய அம்சமான இந்த வித்தியாசத்தை பெற்றோர் உணர வேண்டும்.வெற்றியையும்,தோல்வியையும் தாங்கும் பக்குவத்தை வளர்த்தெடுக்க வேண்டும்.

நம் நாட்டின் வளர்ச்சி மாணவர்களை நம்பியே இருக்கிறது.மாண்+அவன்=மாணவன்.மாண் என்றால் பெருமை.ஆக,மாணவன் என்றால் பெருமை மிக்கவன் என்று பொருள்.பெருமை மிக்க திறமைகளை மாணவப்பருவத்தில் தான் வளர்த்துக் கொள்ள முடியும்.அதற்கேற்ற சூழ்நிலையை அமைத்துக் கொடுப்பது பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கையில் தான் உள்ளது.
“கல்வி கற்றதன் பயன் அதனை மற்றவர்களுக்குக் கற்றுத் தருவதே.எனவே தான் அன்னசத்திரம் வைத்தலை விட,ஆலயம் கட்டுவதை விட மிகப்பெரிய புண்ணியச்செயல் கல்லாத ஒருவனை கற்றவனாக்குவதே” என்று முழங்கினான் பாரதி.